டெல்லி: குடியுரிமை (திருத்தம்) சட்டம் தொடர்பான, போராட்டங்கள் வன்முறையில், இதுவரை உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. ஆனால், நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களில் வன்முறை மற்றும் போராட்டங்களின்போது பலியானோர் எண்ணிக்கையை சேர்த்தால், அது 12ஐ தொட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

மீரட் மாவட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரம் 8 வயது சிறுவன் வாரணாசியில் ஏற்பட்ட போராட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், மாநிலத்தில் பல இடங்களில் முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

கோரக்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, நகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பேணுவதற்கு காவல்துறையினர் இங்கு ஐபிசி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவுகளை விதித்துள்ளனர். இது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.