செல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்

செல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்

சென்னை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை கொண்டு சசிகலா சொத்துக்கள் வாங்கியதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பல சொத்துக்கள் சசிகலா 1 ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாப்ட்வேர் கம்பெனி, ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகள் ஆகிய, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, 2016 நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு, அதாவது பண மதிப்பிழப்பின் மூலம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிறகு அந்த பணத்தை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை வாங்க செல்லாத நோட்டுக்களை குறிப்பிடத்தக்க அளவுக்கு பயன்படுத்தியிருந்தாராம் சசிகலா. இந்த பணத்தை வாங்கிக் கொண்டு சொத்துக்களை விற்றவர்கள், அந்த பணத்தை எப்படியோ வங்கிகளில் மாற்றி செல்லும் பணமாக்கியிருக்க கூடும் என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

மதிப்பீடு நிறைவு பெற்றது வருமான வரித் துறையின் மூத்த நிலை ஆலோசகர் ஏ.பி.சீனிவாஸ் மற்றும் ஏ.என்.ஆர். ஜெயப்பிரதாப், 2012-13 முதல் 2017-18 வரையிலான நிதியாண்டுகளுக்கான நடவடிக்கைகளை முடித்துவிட்டதாகவும், மதிப்பீட்டு ஆணைகளை வருமான வரித் துறை இணையதளத்தில் புதன்கிழமை பதிவேற்றியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறுக்கு விசாரணை இல்லை விசாரணைகள் நிறைவடைந்து இறுதி மதிப்பீட்டு ஆர்டர் நிறைவேற்றப்பட்டதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டதால், இதில் குறுக்கு விசாரணைக்கு அனுமதிப்பது குறித்த கேள்வி எழாது என்று நீதிபதி தெரிவித்துவிட்டார். 2012-13 முதல் 2016-17 வரையிலான நிதியாண்டுகளில் சசிகலா பங்குதாரராக மாறிய நிறுவனங்கள் தொடர்பாக விசாரணை நடந்தது என்றாலும், 2017-18 ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு செய்த பணத்தை பயன்படுத்தியதாக இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானபோது, ஜெயலலிதா ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நேரத்தில், சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.

சசிகலா தரப்பு கோரிக்கை எனவே, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித் துறையிடம் வாக்குமூலம் அளித்த தனது உறவினர்களான கிருஷ்ணபிரியா, ஷகீலா, விவேக் ஜெயராமன், டாக்டர்.சிவக்குமார் உள்ளிட்ட 14 பேரிடமும், தனக்கு சொந்தமானதாக சொல்லப்படும் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் ஆடிட்டர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமெனவும் சசிகலா தரப்பு கோரியது. ஆனால், வருமான வரித்துறை மதிப்பீட்டு நிறைவடைந்துவிட்டதால், குறுக்கு விசாரணை கிடையாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.