வாஷிங்டன்: மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 500 க்கும் மேற்பட்ட டோஸ்களை கொட்டி அழித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருந்தாளர். விஸ்கான்சின் பகுதியைச் சேர்ந்த ஸ்டீவன் பிராண்டன்பர்க் என்ற மருந்தாளர் இப்படிச் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார். மாடர்னா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது. அந்த நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசும் அனுமதி கொடுத்துள்ளது. 500 டோஸ் மருந்து இந்த நிலையில்தான், மருந்து குப்பிகளை குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேற்றி கொட்டியுள்ளார் ஸ்டீவன்.
ஸ்டீவன் பிராண்டன்பர்க் கிராப்டனில் உள்ள அரோரா மருத்துவ மையத்தில் பணியாற்றியவர், அங்கு அவர் மாடர்னா தடுப்பூசியின் 57 குப்பிகளை எடுத்துச் சென்றது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரித்து பார்த்தபோது, 500 என்ற அளவுக்கு, மருந்துகள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
மரபணு மாறிவிடும் என்று நம்பிக்கை இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பற்றவை என்று ஸ்டீவன் கருதியதாகவும், குறிப்பாக.. இவற்றைப் பயன்படுத்தும்போது மனிதனின் மரபணு மாற்றம் அடைந்து விடும் என்ற பயம் அவருக்கு இருந்ததாகவும், எனவே அதை போட்டு அழித்ததாகவும் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளின் தாக்கத்தால்தான் இவ்வாறு மருந்துகளை வீணாக கொட்டி அழித்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விவாகரத்து வழக்கு ஸ்டீவனுக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து தொடர்பான வழக்கு நடந்து வருவதாகவும், இந்த வழக்கு காரணமாகத்தான் ஸ்டீபன் அப்செட்டில் இருந்துள்ளார், எனவே வீணாக மருந்துகளை கொட்டி அழித்துள்ளார் என்கிறார்கள் போலீஸார். கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் மனிதன் முதலையாக மாறிவிடுவான்.. ஆண், பெண்ணாக மாறி விடுவார்கள், பெண்களுக்கு மீசை முளைத்து விடும் என்று உலக அளவில் பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகின்றன.
சிப் பொருத்தம் அமெரிக்க சமூக வலைத்தளங்களில், கொரோனா, தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டால் அதில் சிப் பொருத்தப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்காணிக்கும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. இவர்களுக்கு நடுவே மனிதனின் மரபணு மாறிவிடும் என்று கூறி இப்படி ஒருவர்.. அதுவும் மருந்து உற்பத்தி பிரிவில் பணியாற்ற கூடிய ஒருவர் மருந்துகளை நாசம் செய்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமே தடுப்பூசி எப்போது தங்களுக்கு கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வீணாக வதந்திகளை நம்பி இவ்வாறு அவற்றை அழித்து கெடுப்பது சரிதானா என்ற கேள்விகள் எழுகின்றன.