உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்

எவ்வளவு தான் உடற்பயிற்சியை சரியாக செய்தாலும், சாப்பிடுவதில் சில தருணங்களில் தவறு செய்கிறோம். அதாவது நாம் சாப்பிடும் உணவுகளுக்கு அதற்கென்று நேரம் உள்ளது. அந்த நேரத்தை சரியாக பின்பற்றி சாப்பிடாமல் இருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அதிலும் மற்ற நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் அது மிகவும் ஆபத்தானது.
அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர், உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று கூறுகின்றனர்.
ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக்கோஸானது எரிபொருளாக மாறுகிறது. எனவே இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். இப்போது அவ்வாறு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா?..
பழ ஜூஸ்
எவ்வளவு தான் பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.

முட்டை
முட்டையானது உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான். ஏனெனில் அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கோலைன் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை பொரியல் செய்து சாப்பிட கூடாது. அப்போது அதில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அதனை வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது.

மில்க் ஷேக்
பொதுவாக மில்க் ஷேக் உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த மில்க் ஷேக்கை பழங்களால் செய்து சாப்பிடும் போது, அதில் சர்க்கரை அதிகமாகிவிடும். எனவே அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, பழங்களுக்குப் பதிலாக பாதாம் சேர்த்து செய்யலாம் அல்லது சாதாரண பாலாக குடிக்கலாம்.

காய்கறிகள்
காய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அப்படியே வரும். ஆனால் அவற்றையே உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்ததே வீணாகிவிடும்.

பிரட்
வெள்ளை பிரட் எனப்படும் மைதாவால் ஆன பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின் இந்த பிரட் சாப்பிட்டால், அவை உடலில் செல்லும் போது மிகவும் எளிதில் சர்க்கரையாக மாறிவிடும். எனவே அப்போது வேண்டுமெனில் நவதானியங்களால் ஆன பிரட்டை(கோதுமை பிரட்) சாப்பிடலாம்.

சீஸ்
நீண்ட தூரம் ஓடியப் பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
உடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.