ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டுக்கு தொடரும் தடை.. இந்தியாவின் முடிவு என்ன? வல்லுநர் குழு பரிந்துரை
டெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளால் ரத்த உறைத்தல் பிரச்னை ஏற்படுவதில்லை என்று வல்லுநர் குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது. இந்தியாவில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் இரண்டாம் கட்டமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்காக பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசியைத்தான் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி எனப் பல நாடுகளும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை விதித்தது. இதனால் இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பாதுகாப்புதன்மை குறித்து ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ரத்த உறைதல் பிரச்சினை அதிகரிப்பதில்லை என்று அந்த வல்லுநர் குழு தனது முடிவை மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அளித்துள்ளது. முன்னதாக உலக சுகாதார அமைப்பும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் பாதிப்பு இல்லை என்றும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 32.53 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன, ஒட்டுமொத்தமாக இதுவரை ஐந்து கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.