கொழுப்பை கரைக்கும் பீட்ரூட்

வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் சத்துக்கள் நிறைந்த மிக முக்கியமான ஒன்று பீட்ரூட்.
காய், கீரை, ஜூஸ் என பீட்ரூடின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை.
பீட்ரூட் என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

நைட்ரேட்டுகளின் தலை சிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது.
இவ்விரண்டு கூறுகளும் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் போன்றவை மிகுந்து காணப்படுகிறது.
பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது

பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும்.
ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக் குழந்தையைப் பாதுகாக்க வல்லது.
அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம்.
மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.

பாலியல் நலம் மற்றும் சகிக்கும் தன்மையை மேம்படுத்தும்

“இயற்கையான வயாக்ரா” என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன.
மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும்.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது.
வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று நோய் செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.