சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
இதனையடுத்து வெற்றிமாறனுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தனி சகாப்தம் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா இயக்கிய ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது தனுஷுக்கும் பாலுமகேந்திராவிடம் உதவிய இயக்குநராக வேலை பார்த்த வெற்றிமாறனுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு தான் தமிழ் சினிமாவின் தனி சகாப்தமாக மாறப்போகிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
பொல்லாதவனில் தொடங்கிய தாண்டவம் தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான ‘பொல்லாதவன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. பொல்லாதவன் வெற்றியை மட்டுமே தெரிந்த பலருக்கும், அந்தப் படம் எத்தனை தடைகளைக் கடந்து வெளியானது எனத் தெரியாது. பல வலிகளையும் அவமானங்களையும் கடந்து இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், அடுத்தடுத்து நிகழ்த்தியதெல்லாம் மாபெரும் அசாத்தியங்கள்.
வெற்றிமாறன் – தனுஷ் வெற்றிக் கூட்டணி போர்க்களத்தில் எதிரியை வீழ்த்த வேண்டுமானால் அங்கே கூர்மையான ஆயுதம் தேவை. அப்படியே ஆயுதம் கிடைத்தாலும் அதனை திறமையாக பயன்படுத்த நுட்பங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இணையும் மையப்புள்ளி தான் வெற்றிமாறனும் தனுஷும். அவர்கள் கூட்டணியில் வெளியான படைப்புகளும். வெற்றிமாறன் இயக்கிய படங்களில் தனுஷின் நடிப்பு இயல்பையும் கடந்து மிகவும் அடர்த்தியாக இருக்கும்.
ஆடுகளம் முதல் அசுரன் வரை பொல்லாதவனைத் தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான ‘ஆடுகளம்’ தேசிய விருதுகளை வென்று அமர்க்களம் செய்தது. அடுத்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம், லாக்கப் கைதிகளின் துயரங்களை இந்தச் சமூகத்தின் முகத்திலும் அதிகார வர்க்கங்களின் கரங்களிலும் காறி உமிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ‘வட சென்னை’ படத்தில் தனுஷுடன் சேர்ந்து மாஸ் காட்டினார். இறுதியாக இவர்கள் கூட்டணியில் வெளியான ‘அசுரன்’ இன்னும் ஒருபடி சென்று துவம்சம் செய்தது.
படைப்பிலக்கியங்களின் திரை மொழிபெயர்ப்பாளன் வட சென்னைக்குப் பிறகு ஆந்தாலஜி பின்னனியில் உருவான ‘பாவக் கதைகள்’ படத்தில் ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கியிருந்தார். இப்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். தமிழ்த் திரையுலகமே இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கிடக்கிறது. அதேபோல், வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் இன்னும் படப்பிடிப்பே தொடங்காத ‘வாடிவாசல்’ படத்துக்கும் அதிக எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்துள்ள வெற்றிமாறன், படைப்பிலக்கியங்களின் திரை மொழிபெயர்ப்பாளார் என்று சொன்னால், அது மிகையாகாது.