திருப்பூர் : திருப்பூரில் திருமணமான சில நிமிடங்களிலேயே தாலி கட்டிய மணமகனை வேண்டாம் என மணப்பெண் மறுத்த நிலையில் இருவரும் உடனடியாக பிரிந்து சென்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணத்திற்கு முன்பு நின்று போகும் பல திருமணங்களை பார்த்திருப்போம். ஏதாவது ஒரு காரணம் இருக்கும் பட்சத்தில் பேச்சுவார்த்தையின் போது போன திருமணங்கள் நின்று போயிருக்கின்றன.
திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என பெற்றோர்கள் முன்னிலையில் அல்லது நீதிமன்றத்தின் முன்னிலையில் இருந்து மணவாழ்க்கையை முறித்துக் கொள்ளும் சம்பவங்களும் நம்மை சுற்றி நடைபெற்று தான் வருகிறது.
ஆனால் திருப்பூரில் நடந்திருக்கும் இந்த சம்பவம் முற்றிலும் வேறானது. காரணம் தாலி கட்டிய ஐந்து நிமிடங்களை தம்பதிகள் இருவரும் பிரிவதாக அறிவித்திருப்பது தான் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பிஎன் ரோடு பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் இடையே திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
வரவேற்பு நிகழ்ச்சி பத்திரிக்கை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து திருமணத்திற்கு பெற்றோர் அழைத்து இருந்தனர். நேற்று காலை திருமணத்திற்கான ஏற்பாடுகள் 100% நிறைவடைந்த நிலையில் உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். வழக்கமான சம்பிரதாயங்களின் படி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்ட பின் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருப்பூர் பூலுவா பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரு தரப்பு உறவினர்களும் கலந்து கொண்ட நிலையில் அப்போது மணப்பெண் மணமகனின் காலை பார்த்துள்ளார். இரண்டு கால்களில் ஒருகால் லேசாக வளைந்து இருப்பதைக் கண்ட அவர் இதுகுறித்து மணமகனிடம் கேட்டுள்ளார். அப்போது ஒரு விபத்தில் அடிபட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ததால் கால் அப்படி இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் தன்னிடம் ஏன் இதை முன்னரே கூறவில்லை எனக் கூறி தன்னை ஏமாற்றி விட்டீர்கள் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் இந்த விவகாரம் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றது. மணமகள் மணமகன் மற்றும் இரு தரப்பு உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்து திருமணம் செய்ததாக மனமகளும் அவர்களுடைய பெற்றோரும் குற்றம் சாட்டினர் .மேலும் மணமகன் வேலைக்குச் செல்ல மாட்டார் என்பதால் தனக்கு திருமணம் வேண்டாம் என மணமகள் அடம் பிடித்தார். இதை அடுத்து இருவரும் மண பந்தத்தில் இருந்து பிரிந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர். திருமணமான சில நிமிடங்களில் மனமேடையில் மணமகனை மணமகள் வேண்டாம் என சொல்லிச் சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.