தொடர்ந்து பெய்யும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

தொடர்ந்து பெய்யும் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றிய கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் மீண்டும் கனமழை துவங்கியுள்ளது.
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக்கல்லூரி, அண்ணாபல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் போல் மழை நீர் ஓடுகிறது. சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையும் மழைநீரில் மூழ்கியது.
இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், கிழக்கு தாம்பரம், முடிச்சூர் சாலையிலும் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
தொடரும் கனமழையால் கிண்டி, வடபழனி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம், குழல், குளத்தூர், மாதவரம், ராஜமங்கலம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி,முடிச்சூர் பகுதிகளில் கிருஷ்ணா நகர் பாரதி நகர் ,மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது.
செங்குன்றத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று முகப்பேர் மேற்கிலும் இன்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது
மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வு வரும் 16ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
அதிகாலையில் இருந்து கனமழை கொட்டி வருவதால், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் வருகின்ற 8ம் திகதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply