டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற நிலையில் ஜனவரி 8ஆம் தேதி நாளை நாடு முழுவதும் மீண்டும் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை போல், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஊரக அல்லது நகர்ப்புற இடங்கள் என மூன்றுவிதமான இடங்கள் அடையாளம் காணப்படும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 9 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.
இதில் 6 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டாலும் 95 லட்சம் பேர் வரை குணமடைந்துள்ளது நம்பிக்கையை தருகிறது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நடைபெற்ற ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவி ஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் புனேயில் சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளித்ததில் இருந்து 10 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயாராக இருக்கிறோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதை மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதற்கான ஒத்திகை கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை ஜனவரி 8ஆம் தேதி இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி ஒத்திகை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குகிறார். பயனாளிகளின் பதிவு, திட்டமிடப்பட்ட இடங்களில் தடுப்பூசி போடுவது உட்பட ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டம், மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் பரிசோதிக்கப்படும். மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் என கொவிட்-19 தடுப்பூசி அறிமுகத்தின் அனைத்து அம்சங்களையும், இந்த ஒத்திகை அறிய வைக்கும். இந்த தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள ‘கோ-வின்’ என்ற செயலியையும், மென்பொருளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதில் கோவிட் தடுப்பூசிகள் இருப்பு நிலவரம், அவற்றின் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி பயனாளிகளை கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்ட மேலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இந்த மென்பொருள் வழங்கும். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக கால் சென்டரும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி பணியை தொடங்குவதற்கு குளிர்சாதன கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசிகளை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் குளிர்சாதன பெட்டிகள், இதர தளவாடங்கள் உட்பட அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன.