You are currently viewing பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் நீங்கள் எந்த வகை?

பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் நீங்கள் எந்த வகை?

பொதுவாக, பண விஷயத்தில் மனிதர்களிடம் நான்கு விதமான போக்குகள் காணப்படுவதாக ஃபைனான்ஸியல் தெரபிஸ்டுகள் கூறுகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை?

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், நடிகை கரீனா கபூருடன் உரையாடிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (இந்தியாவின் சூப்பர் ஸ்டார் முதலீட்டாளர்) ஒரு ரகசியத்தைக் கூறினார்.

`பணத்தை மதித்து சரியாகக் கையாள்பவரிடமே பணம் சேரும்.’

ஒரே குடும்பத்தில் பிறந்து, ஒன்றாகவே வளர்ந்து, கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் இருவரில் ஒருவர் மட்டும் நன்கு முன்னேறுவதையும், அடுத்தவர் தடுமாறுவதையும் எத்தனை இடங்களில் பார்த்திருக்கிறோம்? முகேஷ் அம்பானியையும், அனில் அம்பானியையும்விட வேறோர் உதாரணம் இதற்குத் தேவையா?

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி

அப்படியானால், பணத்தை ஈர்க்கும் சக்தியும், இழக்கும் தன்மையும் நம் ஜீனிலேயே இருக்கின்றனவா?

`ஆம்’ என்கிறது ஜர்னல் ஆஃப் ஃபைனான்ஸியல் தெரபி. நமக்கு சின்ன வயதில் பணம் சம்பந்தமாக ஏற்பட்ட அனுபவங்களும் பணத்துடன் நமக்கான உறவில் ஏற்படக்கூடிய பிழைகளைத் தீர்மானிக்கின்றனவாம்.

இதனால் ஏற்படும் தாக்கங்கள் நிறைய… உடல் / மன நலத்தை இழப்பதில் இருந்து, உறவினர்கள், நண்பர்கள், ஏன், கணவன்/மனைவியை இழப்பதுவரை இந்தப் பணப்பிழைகளின் விளைவுகள் ஏராளம். பொதுவாக, பண விஷயத்தில் மனிதர்களிடம் நான்கு விதமான போக்குகள் காணப்படுவதாக ஃபைனான்ஸியல் தெரபிஸ்டுகள் கூறுகிறார்கள். இதில் நீங்கள் எந்த வகை?

1. பண விஷயங்களைத் தவிர்க்க விரும்புபவர்கள்
கரன்ட் பில், வாடகை, போன் பில் போன்றவற்றை லேட்டாகக் கட்டுவது, பேங்க் ஸ்டேட்மென்ட், பத்திரங்கள் போன்றவற்றை மேம்போக்காகப் பார்ப்பது, எமர்ஜென்ஸி ஃபண்ட், ரிட்டயர்மென்ட் சேவிங்ஸ் போன்ற விஷயங்களில் ஆர்வமின்றி இருப்பது… இவையெல்லாம் இவர்களின் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

இவர்களின் தாரக மந்திரம், “எனக்கும், ஃபைனான்ஸ் விஷயங்களுக்கும் ரொம்ப தூரம்!”, “எப்பப் பாத்தாலும் பணம், பணம்னு அலையறது தப்பு!”, “பணம் எங்க ஓடிப் போயிடும்? நாளைக்குப் பாத்துக்கலாம்”. இந்த மன நிலையால் ஏற்படும் நன்மை, தீமை எனப் பார்த்தோமானால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதை நன்மை எனலாம். இதே, பணத்துக்கான பற்றாக்குறையால் வாழ்வின் பிற்பகுதியில் கஷ்டம் வரும் வாய்ப்புள்ளதை தீமை எனலாம்.

பணம் சம்பாதிக்கும் விஷயம்
பணம் சம்பாதிக்கும் விஷயம்
vikatan
தீர்வு:

தங்களுக்கு விருப்பமில்லாத பணச்செயல்களைக் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கலாம். சேவிங்ஸ், இ.எம்.ஐ போன்றவற்றை வங்கியில் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் தருவதன் மூலம் ஆட்டோமேட் செய்யலாம். சற்று அதிகமாகப் பணப்புழக்கம் உள்ளவர்கள், ஆடிட்டர்கள், நிதி ஆலோசகர்கள் மூலம் நிதி நிர்வாகம் செய்ய முற்படலாம்.

2. செலவு என்றாலே பதறுபவர்கள்
பணத்தைப் பற்றிய அதீத கவலை, சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனத்தைப் பின்பற்றுவது, நிறைய பணம் இருந்தாலும் செலவழிக்க அஞ்சுவது இவையெல்லாம் பதற்ற மனதுக்காரர்களின் அம்சங்கள். பணத்தைச் சேர்ப்பது ஒன்றே இவர்கள் குறிக்கோள். அதற்காக எங்கெல்லாம் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, ஆஃபர் கிடைக்கிறது என்று கவனித்த வண்ணம் இருப்பார்கள். கையில் பணமிருந்தாலும்கூட, அடிக்கடி பணப்பற்றாக்குறை பற்றியே புலம்புவார்கள்.

இவர்களின் தாரகமந்திரம், “தனக்காக அதிகம் செலவழிப்பது தவறு”, “வருமுன் காப்பது நல்லது”, “எதையும் ஒரு முறைக்குப் பத்து முறை யோசித்து வாங்க வேண்டும்.”

இந்த மன நிலையால் ஏற்படும் சாதக பாதகமெனப் பார்த்தோமானால், எப்பேர்ப்பட்ட எமர்ஜென்சிக்கும் தயார் நிலையில் இருப்பதை சாதகம் எனலாம். லாபகரமான ஆஃபர்கள் இவர்களின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. ரிஸ்க் எடுக்க மிகவும் தயங்குவதையும், சேமித்த செல்வத்தை அனுபவிக்கக் கூட ஆயிரம் முறை யோசிப்பதையும் பாதகமாகக் கருதலாம்.

பணம் சம்பாதிக்கும் விஷயம்
பணம் சம்பாதிக்கும் விஷயம்
தீர்வு:

வாழ்வின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தோஷச் செலவுகளுக்காகப் பணம் ஒதுக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் குற்ற உணர்வின்றி வாழ்க்கையை ரசிக்கலாம்.

3. பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்கள்
கிராமங்களில் `ஓட்டைக் கை’ என்று பெயர் வாங்குவது இவர்கள்தான். சின்ன மீனைப் போட்டாத்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம் என்று சொல்லி, தங்களையறியாமல் பெரிய மீன்களையே அள்ளி வீசுபவர்கள். பட்ஜெட் போட்டுச் செலவு செய்வது, திட்டமிட்டுப் பொருள்கள் வாங்குவது என்பதெல்லாம் இவர்கள் அகராதியிலேயே இல்லை.

இவர்களின் தாரகமந்திரம், “என்ன பெரிய்ய்ய செலவு பண்ணிட்டேன்?”, “பணம்தானே போச்சு, தலை போகலையே?”, “மேல போகையில பணத்தை எடுத்துக்கிட்டா போகப்போறோம்?”

இதன் சாதக பாதகங்களெனப் பார்த்தோமானால், கஞ்சமில்லாமல் எல்லோருக்கும் செலவு செய்யும் நல்லமனது இருப்பதையும், சில சமயங்களில் இவர்கள் எடுக்கும் ரிஸ்க் பெரிய பலன்களைக் கொடுப்பதையும் சாதகம் எனலாம். சிஸ்டமேட்டிக்காக சேமிக்க முடியாமல்போவதை பாதகம் எனலாம்.

பணம் சம்பாதிக்கும் விஷயம்
பணம் சம்பாதிக்கும் விஷயம்
தீர்வு:

தங்கள் குறையை உணர்ந்து, ரிஸ்க் எடுக்கும் முன்போ அல்லது பெரிய செலவுகள் செய்யுமுன்போ தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுப்பது நன்மை தரும்.

4. பணத்துக்கு அதீத முக்கியத்துவம் தருபவர்கள்
இவர்கள், பணத்தை வழிபடுவார்கள். பண விஷயத்தில் போட்டி, பொறாமை அதிகம் உள்ளவர்கள். தங்களைச் செல்வந்தர்களாகக் காட்டிக்கொள்வதில் ஆனந்தம் அடைவார்கள். ஆடம்பரப் பிரியர்கள். இவர்களின் தாரக மந்திரம், “இன்னும் கொஞ்சம் பணம் மட்டும் கிடைத்தால் என் லெவலே வேறு!”, “பணம் பாதாளம் வரை பாயும்!”.

இதன் நன்மை, தீமைகளெனப் பார்த்தோமானால், சமூகத்தில் நல்ல நிலையை அடைவதற்கு அதிகம் உழைக்கத் தயாராக இருப்பதை நன்மை எனலாம். தகுதிக்கு மீறி செலவு செய்வதும், அதற்காகக் கடன் வாங்குவதும், குறுக்கு வழியில் சம்பாதிக்க முயல்வதும் தீமை எனலாம். இது, இவர்களைக் கீழே தள்ளிவிடக்கூடும்.

பணம் சம்பாதிக்கும் விஷயம்
பணம் சம்பாதிக்கும் விஷயம்
தீர்வு:

நல்ல நிலைமைக்கு வர ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை; அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கையில் கவனம் தேவை. பணத்தைக் கையாளுவதில் நான்கு விதமான போக்குகளைப் பார்த்தோம். இவற்றில் நம் போக்கை அடையாளம் கண்டு சரி செய்துகொள்வோமா?

Leave a Reply