மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட திரையுலகினர்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
நடிகர் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் சைதாப்பேட்டை, அண்ணாநகர், பூந்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட்டுகள், உணவு, பாய், போர்வை ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்கள்.
மேலும் சென்னையில் மீட்புப் பணிகள் நடக்கவேண்டிய இடங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவர்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பல இடங்களில் இருந்தும் ஆர் வலர்களிடம் இருந்தும் உதவிகள் வருகின்றன. எங்கள் பணிகள் தொடரும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியிலும், ஷாலினி அஜித் மந்தைவெளி பேருந்து நிலையம் அருகிலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் சுமார் 2000 பேருக்கு உணவளித்தனர்.
நடிகர் மம்முட்டி
மலையாள நடிகர் மம்முட்டி அடையாறு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட சென்னையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் மீட்பு குழுவின் தொடர்பு எண்ணை தன் முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். மேலும் அவர்கள் தங்குவதற்கான இடங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.