விவசாயிகளுக்கு நல்ல சந்தையை உறுதி செய்வது எங்கள் கடமை… புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசும் போது, சாகர் மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். விவசாயிகள் நல்ல சந்தைகளைப் பெறுவதை உறுதி செய்வது எங்கள் கடமை என்றும் கூறினார். தமிழகம் மற்றும் புதுவையில பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.25 மணிக்கு சென்னை வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார் பிரதமர் மோடி. பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சாலை மார்க்கமாக சென்று காரில் சென்று ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி லாஸ்பேட்டை பகுதியில் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதியுடன் கூடிய மகளிர் விடுதியை திறந்து வைத்தார். ஜிப்மரில் ரூ.28 கோடியில் ஆராய்ச்சி கூடத்துடன் கூடிய ரத்த வங்கியையும் திறந்து வைத்தார். புதுவை இந்திராகாந்தி விளையாட்டு திடலில் ரூ.7 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் சாகர்மாலா திட்டத்தில் ரூ.44 கோடியில் சிறிய துறைமுகம் அமைக்கவும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூ.491 கோடி புதிய கட்டிடத்திற்கும் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய சட்டநாதபுரம் – நாகை NH45A நெடுஞ்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். விவசாயிகள் அதன்பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், நமது விவசாயிகள் விவசாயத்தல் புதுமை செய்கிறார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நல்ல சந்தைகளைப் பெறுவதை உறுதி செய்வது எங்கள் கடமை. நல்ல சாலைகள் அதைச் செய்கின்றன. நான்கு வழிச்சாலைகள் இந்த பகுதியில் தொழில்களை ஈர்க்கும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின்
அடையாளமாகத் திகழ்கின்றார்கள். கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார் . மேலும், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். சாகர் மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்தப்படும். புதுச்சேரி அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றும் கூறினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார் புதிய திட்டங்கள் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார். இது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி அலகுகளும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார். இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதோடு, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கு சாகர்மாலா திட்டம் மூலம் நிதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.20 கோடி செலவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஸ்மார்ட்சிட்டி பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1,280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1,248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1,088
குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்பட 9 ‘ஸ்மார்ட்’ நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டம் இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியா வளாகத்திற்கு அருகே பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாறறுகிறார். இந்த கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமானநிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.