{வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் ஈழப் போராட்ட ஆரம்பம்} 2

கட்சி தாவிய தமிழ் எம்.பி. சுட்டுக்கொலை
பிரபாகரன் உமாமகேஸ்வரன் இணைந்து தாக்குதல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உமாமகேஸ்வரன் இணைந்தார். கட்சி மாறிய தமிழ் ‘எம்.பி’ கனகரத்தினத்தை பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் சுட்டுக் கொன்றனர். தங்கதுரை, பிரபாகரன் போன்ற போராளிகளை அமிர்தலிங்கம் அடிக்கடி சந்திப்பது வழக்கம். 1977-ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது,
உமா மகேஸ்வரனை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டார்.
உமா மகேஸ்வரனின் இயற்பெயர் நல்லைநாதன். பிரபாகரனைக் காட்டிலும் 10 வயது அதிகம். கொழும்பு தமிழ் இளைஞர் பேரவையில் கொழும்பு கிளைத் தலைவர். ஆங்கிலத்தில் ஆற்றல் மிக்கவர். இது இயக்கத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என்பதால், அமிர்தலிங்கத்தின் யோசனையை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார்.
அதுவரை 5 பேர் கொண்ட மத்தியக் குழுவின் தலைவராகவும், ராணுவத் தளபதியாகவும் பிரபாகரனே இருந்து வந்தார். உமா மகேஸ்வரன், இயக்கத்தில் சேர்ந்ததும், அவருக்கு தலைவர் (‘சேர்மன்’) பதவியை வழங்கி விட்டு, ராணுவப் பொறுப்பை மட்டும் பிரபாகரன் வைத்துக்கொண்டார். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. இருந்தபோதிலும் பிரபாகரனின் விருப்பம் என்பதற்காக ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே யாழ் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா கொலை வழக்கை விசாரிக்க மூன்று போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களை 1977-ம் ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றனர்.
1977-ம் ஆண்டு நவம்பர் மாதம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு சந்திப்பு, அமிர்தலிங்கம் வீட்டில் நடந்தது. இதில் பிரபாகரன், உமா மகேஸ்வரன், நாகராஜா, பற்குணராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். “தமிழர்களுக்கு சில தீர்வுகளை அளிக்க ஜெயவர்த்தனா முன்வந்துள்ளார். எனவே, சிறிது காலத்திற்கு உங்கள் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. ஜெயவர்த்தனாவின் நேர்மையைப் பரிசோதிப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள்” என்று அமிர்தலிங்கம் கேட்டுக் கொண்டார். அவர்கள் பேசுவதை விடுதலைப் புலிகள் அமைதியாகக் கேட்டபடி அமர்ந்து இருந்தனர். பிரபாகரன் வேறு சிந்தனையில் மூழ்கி இருந்தார்.
இந்த நிலையில், அம்பாரை பகுதியில் உள்ள பொட்டுவில் தொகுதி வேட்பாளர் திடீரென்று இறந்துவிட, அந்தத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கனகரத்தினம் போட்டியிட்டார். தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வெற்றி பெற்ற அவர், டிசம்பர் 19-ந்தேதி ஐக்கிய தேசிய கட்சிக்கு (ஜெயவர்த்தனா கட்சி) தாவினார். மேலும் அவர், “தமிழர்களுக்கு ஜெயவர்த்தனா நல்லது செய்வார்; தமிழர் விடுதலை கூட்டணிக்குக் கிழக்குப் பிராந்திய மக்கள் வாக்களித்து இருந்தாலும், தமிழ் ஈழத்துக்கான வாக்காக அதைக் கருதக்கூடாது” என்று தெரிவித்தார்.
கட்சி தாவிய கனகரத்தினம் தமிழ் இனத் துரோகியாக கருதப்பட்டார். அவரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அவரது நடவடிக்கைகளை உமா மகேஸ்வரன் உன்னிப்பாக கவனித்து வந்தார். அதன் பிறகு பிரபாகரனுக்குத் தகவல் அனுப்பினார். 1978-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி இரவு பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்து ரெயிலில் புறப்பட்டார். மறுநாள் காலை அவரை கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்தில் உமா மகேஸ்வரன் வரவேற்றார். ரெயில் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டனர். அங்கிருந்து கொலுபிட்டியாவுகுப் பஸ் ஏறினார்கள். அங்குதான் கனகரத்தினத்தின் வீடு இருந்தது.
காலை 9 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்ட கனகரத்தினத்தை பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்ததில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அவர், “ஒரு உயரமான பையனும், ஒரு குட்டையான பையனும் என்னைச் சுட்டனர்” என்று வாக்குமூலம் அளித்தார். கனகரத்தினத்தைச் சுட்டபிறகு உமா மகேஸ்வரன் கொழும்பிலேயே தங்கினார். பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்ட சில வாரங்கள் கழித்து, கனகரத்தினம் மரணம் அடைந்தார்.
2 தமிழ்த் தீவிரவாதிகள் கொழும்பு நகருக்கே வந்து பாராளுமன்ற உறுப்பினரைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் என்பதை ஜெயவர்த்தனாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவர்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கனகரத்தினம் கொலையை விசாரிக்கும் பொறுப்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்தியம் பிள்ளை தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. “எப்படியாவது புலிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பேன். பிரபாகரனைக் கைது செய்வேன்” என்று பாஸ்தியம் பிள்ளை சபதம் செய்தார். பிரபாகரன் புகைப்படம் கிடைக்கவில்லை. இதனால் உமா மகேஸ்வரன், நாகராஜா, வாமதேவன் ஆகிய 3 பேரின் புகைப்படங்களையும் பெரிதுபடுத்தி போஸ்டர் ஒட்டினார். மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் நடத்துவதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1978-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி 6 மணிக்கு பாஸ்தியம் பிள்ளை ‘ஜீப்’பை எடுத்துக்கொண்டு பாலசிங்கம், பேரம்பலம் ஆகிய போலீஸ்காரர்களுடன் புறப்பட்டார். ‘ஜீப்’பை டிரைவர் சிறிவர்த்தனா ஓட்டினார். குறிப்பிட்ட பகுதியை நெருங்கியதும், ‘ஜப்’பில் இருந்து பாஸ்தியம் பிள்ளையும், போலீஸ்காரர்களும் கீழே இறங்கினார்கள். ஜீப்’ வந்து நிற்பதை உமா மகேஸ்வரனும், நாகராஜாவும் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்தபடியே கவனித்து விட்டனர். அங்கே பிரபாகரனைத் தவிர விடுதலைப்புலிகளின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் இருந்தனர். இதனால் உமா அதிர்ச்சியில் உறைந்து போனார். போலீசுக்கு அடையாளம் தெரியாத 2 பேரை ஒற்றையடிப்பாதை வழியாக நடந்து செல்லுமாறு செல்லக்கிளி அனுப்பி வைத்தார். அப்போது அவர்களை பாஸ்தியம்பிள்ளை தடுத்து நிறுத்தினார். அருகில் உள்ள குடிசையைச் சோதனை செய்ய வேண்டும் என்று அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே செல்லக்கிளி நின்று கொண்டிருந்தார். சோதனை முடிந்த பிறகு பாஸ்தியம்பிள்ளை, “போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து விடுங்கள்” என்றார். செல்லக்கிளி மிகவும் பணிவாக குனிந்து கொண்டே, “வருகிறேன். அதற்கு முன்பு தேனீர் அருந்திவிட்டு செல்லலாமே” என்று அன்பாக அழைத்தார். இதை ஏற்று தேனீரைப் பெற்றுக்கொண்ட பாஸ்தியம்பிள்ளை, இயந்திரத் துப்பாக்கியைக் கீழே வைத்தார். ஒரு நொடியில் அந்தத் துப்பாக்கியை செல்லக்கிளி எடுத்துக்கொண்டு, அதே வேகத்தில் பாஸ்தியம் பிள்ளையைச் சுட்டுத் தள்ளினார். பாலசிங்கம், பேரம்பலம், ஜீப் டிரைவர் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உமா மகேஸ்வரனும், நாகராஜாவும் கீழே இறங்கி வந்தபோது அனைவரும் செத்துக் கிடந்தனர். அவர்களின் உடலை கிணற்றுக்குள் வீசி எறிந்தார்கள்.
பாஸ்தியம்பிள்ளை வந்த ‘ஜீப்’பில் அனைவரும் ஏறி கிளிநொச்சிக்குச் சென்று அதைக் கொளுத்தினார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் முகாமில் ஒன்று கூடினார்கள். அங்கே பிரபாகரன் இருந்தார். அவரிடம் நடந்த சம்பவங்களை செல்லக்கிளி விலாவாரியாக விவரித்தார். இதைக்கேட்டதும் பிரபாகரன் உச்சி குளிர்ந்தார். ‘தமிர்களுக்குப் பெருமை சேர்த்துவிட்டாய்’ என்று செல்லக்கிளியை பாராட்டினார்.
அதுவரை நாட்டுத் துப்பாக்கியை ஏந்தியவர்களுக்கு இயந்திரத் துப்பாக்கி கிடைத்து விட்டது. இதனால் இதயத்தில் மகிழ்ச்சியை ஏந்தி, களிப்புக் கடலில் நீந்தினர். இதன்பிறகு நடந்த மத்திய கமிட்டியில் பேசிய உமா மகேஸ்வரன், “மக்களின் ஆதரவு நமக்குத் தேவை. நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்களுக்குத் தெரிவித்தாக வேண்டும். பாலஸ்தீன விடுதலை இயக்கம் போல நாமும், கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்” என்ற கருத்தை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, விடுதலைப்புலிகள் யார் யாரைக் கொன்றார்கள் என்ற பட்டியல் தயாரானது. அதை எடுத்துக்கொண்டு உமாமகேஸ்வரன் கொழும்புக்குப் புறப்பட்டார்.
பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும்
இடையில் முரண்பாடு ஆரம்பம்
*****************************
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு கொழும்பு சென்ற உமா மகேஸ்வரன், தன் தூரத்து உறவுப் பெண்ணான ஊர்மிளா தேவியைச் சந்தித்தார். ஊர்மிளா தேவி, தமிழ் இளைஞர் பேரவையிலும், மறைந்த சிவகுமாரன் தாயார் அன்னலட்சுமி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெண்கள் பேரவையிலும் முனைப்புடன் பணியாற்றி வந்தார். திருமணமாகி விவாகரத்து ஆனவர். ஊர்மிளாவின் உதவியோடு கடிதத்தைத் தட்டச்சு (டைப்) செய்வது என்ற எண்ணத்தில் உமா மகேஸ்வரன் அவரைச் சந்தித்தார்.
“யாழ் நகர் மேயர் ஆல்பிரட் துரையப்பா தொடங்கி பாஸ்தியம் பிள்ளை வரை மொத்தம் 11 பேரை விடுதலைப்புலிகளாகிய நாங்கள்தான் கொன்றோம். புதிய தமிழ்ப்புலிகள் (டி.என்.டி) என்ற பெயரில் இயங்கி வந்த நாங்கள், இப்போது தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.ஈ.) என்ற பெயரில் இயங்கி வருகிறோம். இந்தக் கொலைகளுக்கு எந்த ஒரு தனி நபரோ, வேறு எந்த இயக்கமோ பொறுப்பேற்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் பிரதிகள், இலங்கை அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதுவரை தமிழ்ப் போராளிகள் பற்றிய செய்திகள் சிறிய அளவிலேயே பிரசுரமாகும். ஆனால் இந்தச் செய்தி 1978-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியானது.
விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 38 பெயர் கொண்ட தேடப்படுவோர் பட்டியலை அரசு வெளியிட்டது. இதில் பிரபாகரன் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதில் பெரும்பாலானோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். மாவை சேனாதிராஜா, புஷ்பராஜா, சீறிசபாரத்தினம் ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் போலீசில் தாமாகவே முன்வந்து சரண் அடைந்தனர். பாஸ்தியம் பிள்ளை கொலையில் இவர்களுக்கு தொடர்பு இல்லை. தொடர்புடையவர்கள் யாரும் போலீசில் சிக்கவில்லை.
இந்த நிலையில், 1978-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த கலவரத்திற்கு பழிவாங்கவும், ஜெயவர்த்தனாவின் கவனத்தை ஈர்க்கவும். பயணிகள் பாதிக்கப்படாத வகையில் விமானத்தில் குண்டை வைத்து வெடிக்கச் செய்யவேண்டும் என்பது விடுதலைப்புலிகளின் திட்டம். இதற்காக பிரபாகரனும், பேபி சுப்பிரமணியமும் வெடிகுண்டு (`டைம் பாம்’) தயார் செய்தனர். உமா மகேஸ்வரனும், ராகவனும் விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்தனர்.
1978-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி பலாலியில் இருந்து கொழும்பு ரத்மலான விமான நிலையத்திற்கு 35 பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்தில் (ஆவ்ரோ – 748) இரு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டன. அன்றைய தினம் அதில் பேபி சுப்பிரமணியமும், ராகவனும் பயணம் செய்தனர். விமானம் ரத்மலான விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள். கடைசியாக இறங்கிய பேபி சுப்பிரமணியமும், ராகவனும் வெடிகுண்டை விமானத்தில் வைத்துவிட்டு இறங்கினார்கள். சில நிமிடங்களில் விமானம் வெடித்துச் சிதறியது. விடுதலைப்புலிகள் தயாரித்த முதல் ‘டைம் பாம்’ வெற்றிகரமாக வெடித்தது. இது சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அரசாங்கம் யார் என்று அடையாளம் காப்பதற்கு முன்பு, “விமானத் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் – இப்படிக்கு, உமா மகேஸ்வரன், தலைவர் எல்.டி.டி.ஈ” என்ற அதிகாரபூர்வமான கடிதம் பத்திரிகைகளில் பிரசுரமானது.
விமானத் தகர்ப்புக்குப்பிறகு மிகப்பெரிய அளவில் வங்கிக் கொள்ளை நடத்த எல்.டி.டி.ஈ யினர் ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக திட்டம் தீட்டினார்கள். இலங்கையில் உள்ள “திருநெல்வேலி வங்கி” கிளையில் கேஷியராகப் பணியாற்றிய சபாரத்தினம் என்பவரை செல்லக்கிளி நண்பராக்கிக் கொண்டார். அவர் மூலம் வங்கியின் தகவல்களைத் தெரிந்து கொண்டார். வாரம் முழுவதும் சேரும் பணத்தை வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கிளைக்கு கொண்டு சென்று, ‘டெபாசிட்’ செய்வது வழக்கம். இதற்காக வாரந்தோறும் பிற்பகலில் பணப்பெட்டிகள்யாழ்ப்பாணம் செல்லத் தயார் நிலையில் இருக்கும். இந்தத் தகவல்களைத் திரட்டிய செல்லக்கிளி ஓரிரு முறை வங்கிக்கும் நேரடியாகச் சென்று நோட்டமிட்டு வந்தார். 1978-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி வங்கிக்குச் சென்றார்கள். போலீஸ்காரர் கிங்ஸ்லி பரேரா வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியைச் செல்லக்கிளி பறித்து, போலீஸ்காரரைச் சுட்டுக்கொன்றார். அதே வேகத்தில் இன்னொரு போலீஸ்காரரையும் சுட்டுத் தள்ளினார். பிரபாகரன் மற்றும் 4 பேர் வங்கிக்குள் நுழைந்தனர். ஏற்கனவே பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை, சாக்குப்பையில் போட்டுக்கொண்டு வெளியே வந்தனர். அப்போது வங்கி வாசலில் ஒரு போலீஸ் ‘ஜீப்’ வந்து நின்றது. கோப்பே போலீஸ் இன்ஸ்பெக்டர், தனது ‘செக்’கை (காசோலை) மாற்றுவதற்காக ஒரு போலீஸ்காரரை அனுப்பி இருந்தார். ‘ஜீப்’பில் இருந்து கீழே இறங்கிய போலீஸ்காரர் ஜெயரத்தினத்தையும் செல்லக்கிளி சுட்டுக் கொன்றார். கொள்ளையடித்த 12 லட்சம் ரூபாயுடனும், இயந்திரத்துப்பாக்கியுடனும் போலீஸ் ‘ஜீப்’பில் அவர்கள் தப்பிச்சென்றனர். அப்போது ரூ.12 லட்சம் என்பது பெருந்தொகையாகும்.
விமானத் தகர்ப்புக்குப்பிறகு, கிட்டு என்கிற கிருஷ்ணகுமார், மாத்தையா என்கிற மகேந்திர ராஜா, ரகு மற்றும் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர். கிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். பிரபாகரனின் உறவினர். மாத்தையா, பருத்தித்துறைக்காரர். ரகு போலீஸ் துறையில் சேர முயற்சி செய்தார். தமிழர் என்ற காரணத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டதால், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார். அவருக்கும் வல்வெட்டித்துறைதான் சொந்த ஊர். மேலும் வங்கிக் கொள்ளையில் உதவிய கேஷியர் சபாரத்தினமும் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்தார். பின்னர் இவரை தமிழேந்தி என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
புதிதாகச் சேர்ந்தவர்களை பூந்தோட்டம் முகாமுக்கு அழைத்துச்சென்று ஆயுதப்பயிற்சி அளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ஏற்கனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அருளரும், சங்கர் ராஜியும் பயிற்சி பெற்று இருந்தனர். அவர்கள் இருவரும் அடிக்கடி பூந்தோட்டம் முகாமுக்கு வந்து சென்றனர். அவர்களின் வற்புறுத்தலின் பேரில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி பெற 2 பேரை அனுப்ப விடுதலைப்புலிகள் முடிவு செய்தனர்.
இதன்படி உமா மகேஸ்வரனையும், விஜயேந்திராவையும் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் அனுப்பி வைத்தனர். 3 மாதங்களுக்குப்பிறகு திரும்பி வந்த அவர்கள் பயிற்சியில் தங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை என்றும். ஆயுதங்களை கையாள விடவில்லை என்றும் பெரும்பாலான நேரம் முகாமிலேயே இருக்க நேரிட்டதாகவும் புகார் கூறினார்கள். “ஈரோஸ்” இயக்கத்தினர் தங்களை ஏமாற்றி விட்டதாக எல்.டி.டி.ஈ யினர் கருதினர். இதனால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு வற்புறுத்தினர். அந்தப் பணத்தை அவர்கள் ஏற்கனவே செலவழித்து விட்டதால் இந்தப் பிரச்சினையை அமிர்தலிங்கத்திடம் எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சமரசத்தின்படி சங்கர் ராஜி அந்தத் தொகையை பின்னர் செலுத்தினார்.
இந்த நிலையில், உமா மகேஸ்வரன் தொடர்பாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது. உமா மகேஸ்வரனுக்கு, ஊர்மிளா மேல் காதல் என்றும் திருமணம்தான் ஆகவில்லையே தவிர, இருவரும் கணவன் – மனைவி போல வாழ்கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இதனால் பிரபாகரனுக்கு உமா மகேஸ்வரன் மேல் மனஸ்தாபம் ஏற்பட்டது. அவரை அழைத்து இது பற்றி கேட்பதற்கு தீர்மானித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து
உமா மகேஸ்வரன் வெளியேறினார்
ஊர்மிளாவுடன் காதல் எதிரொலி

*************************
ஊர்மிளாவுடன் காதல் என குற்றஞ்சாட்டப்பட்டதால், விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு உமா மகேஸ்வரன் வெளியேறினார். பிரபாகரன் காதல் விவகாரம் தொடர்பில் உமாமகேஸ்வரனிடம் கேள்விஎழுப்பினார். “எங்களுக்குள் எந்தக் காதலும் இல்லை” என்று மறுத்தார், உமா மகேஸ்வரன். “ஆதாரம் இல்லாமல் நான் குற்றம் சாட்டமாட்டேன். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. நீ ஊர்மிளாவை மணந்து கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இயக்கத்தில் இருந்து வெளியேறிவிடு. தவறான முன்னுதாரணம் எங்களுக்குத் தேவை இல்லை” என்று பிரபாகரன் கண்டிப்புடன் கூறினார்.
உமா மகேஸ்வரனை இயக்கத்தில் இணைத்து அவருக்குத் தலைவர் பதவியை அளித்து மகிழ்ந்தவரும் அவரே. ஊர்மிளாவை இயக்கத்திற்கு கொண்டு வந்தவர் உமா மகேஸ்வரன். இயக்கத்தில் சேருவதற்கு முன்பே இருவருக்கும் இடையே நெருக்கம் இருந்து இருக்கிறது. காதல், `செக்ஸ்’ கூடாது என்ற இயக்கத்தின் கொள்கையை உமா மீறிவிட்டதாக பிரபாகரன் கருதினார்.
“ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவன், அதன் ஒழுக்க நெறிகளில் முழுமையான நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் உள்ளவனாக இருக்க வேண்டும்; தலைவனே விதிகளை மீறினால் அந்த இயக்கம் அழிந்துவிடும்” என்பது பிரபாகரனின் அன்றைய எண்ணம். இதனால் அவர் பிடிவாதமாக இருந்தார். உமா மகேஸ்வரனோ ராஜினாமா செய்ய மறுத்தார்.
சிறிது காலத்திற்கு முன்பு, விடுதலைப்புலிகளின் தலைவராக உமா மகேஸ்வரனை உலக நாடுகளில் உள்ள போராளிப் பிரதிநிதிகளிடம் அறிமுகம் செய்து வைத்த லண்டன் பிரதிநிதிகள், இந்த மோதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சார்பாக கிருஷ்ணனும், ராமச்சந்திரனும் சென்னைக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்தனர். “உமா மகேஸ்வரன் பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. காதல்தானே! விட்டு விடுங்கள்” என்று அவர்கள் பிரபாகரனிடம் பரிந்துரை செய்தனர்.
“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர் ஊர்மிளா. அவரோடு இயக்கத் தலைவர் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்பது தெரிந்தால், யாரும் தங்களுடைய சகோதரியையும், மகளையும் இயக்கத்துக்கு அனுப்ப மாட்டார்கள்” என்று பிரபாகரன் கூறியபோது, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. மோதல் முற்றியது. 1980-ம் ஆண்டு உமா மகேஸ்வரன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
பிரபாகரன் மீது உமா மகேஸ்வரன் சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறினார். “விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஜனநாயகமே இல்லை. எல்லா முடிவுகளையும் பிரபாகரனே எடுக்கிறார். சுருங்கச் சொன்னால் அவர் ஒரு சர்வாதிகாரி” என்றார். இதை பிரபாகரன் மறுக்கவில்லை. “ஆமாம். நான் சர்வாதிகாரிதான். முடிவுகளை நான்தான் எடுப்பேன். விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இயக்கத்தில் இருந்தால் போதும்” என்று அவர் பதில் அளித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில், விடுதலைப்புலிகள் இயக்கம், “பிரபாகரன் குழு” என்றும், “உமா மகேஸ்வரன் குழு” என்றும் இரண்டு பிரிவாக பிரிந்து குழப்பத்தில் மூழ்கி இருந்தது. 1980-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபாகரன் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மத்திய கமிட்டி யாழ்ப்பாணத்தில் ஒரு முறையும், வவுனியாவில் ஒரு முறையும் கூடியது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை “மக்கள் இயக்கமாக” மாற்ற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த யோசனை, விடுதலைப்புலிகளைக் கட்டுக்கோப்பு மிக்க ராணுவமாக வடிவமைக்கும் தனது லட்சியத்தைச் சிதைத்துவிடக் கூடியது என்று பிரபாகரன் எண்ணினார்.
அவரது கருத்தை பெரும்பாலோர் ஏற்க மறுத்ததால், “நான் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறேன்” என்று கூறிவிட்டு, பலர் தடுத்தும் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினார். அப்போதும் அவர் தனது வீட்டுக்குச் செல்லவில்லை. தனது மாமாவைத் தேடிப்போனார். அங்கே சில காலம் தங்கி இருந்து எதிர்காலம் குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். பிரபாகரனும், “டெலோ” இயக்கத்தைச் சேர்ந்த தங்கதுரையும் சந்திப்பதற்கு அவருடைய மாமா ஏற்பாடு செய்தார். பிரபாகரனைச் சேர்த்துக் கொள்வதில் தங்கதுரைக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. பிரபாகரனுக்கு ஆயுதங்களைக் கொடுத்து தனி இயக்கமாக செயல்பட உதவலாம் என்று குட்டிமணி கூறினார். முடிவாக டெலோ பயிற்சி முகாம்களுக்கு பிரபாகரனைப் பொறுப்பாளராக நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதை நடைமுறைப்படுத்தும் வகையில் 1980-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு வந்தார். திருச்சியிலும், மதுரையிலும் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டன. இருந்தபோதிலும் இன்னொரு குழுவுக்கு பயிற்சி அளித்து அதைப் பலப்படுத்துகிறோமே என்ற ஆதங்கமும், எப்போது நாம் தனியாக இயங்கப்போகிறோம் என்ற ஆவலும் பிரபாகரன் உள்ளத்தில் இருந்தது. அப்படி தொடங்கும்போது, நாம் சொல்வதை அப்படியே கேட்டு மறுப்பு சொல்லாமல் செயல்படும் விசுவாசமான குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். இதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான பேபி சுப்பிரமணியம், பண்டிதர், ராகவன், கிட்டு, செல்லக்கிளி, சீலன் என்கிற சார்லஸ் அந்தோணி ஆகியோருடன் தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டார்.
பிரபாகரன் சென்னையில் இருந்தபோது, அனுராதபுரம் சிறையில் இருந்து தப்பித்து வந்து சென்னை மைலாப்பூரில் வசித்த தனபாலசிங்கம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் ஒரு கிரிமினல். அவருக்கு கொள்கை எதுவும் கிடையாது. ஸ்ரீநகரி என்ற இடத்தில் உள்ள ஒரு காட்டில் பத்மநாபனை கொன்று விட்டு, அளவெட்டி கூட்டுறவுச் சங்கத்தில் கொள்ளையடித்த பணத்தோடுதான் அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். இந்த பின்னணி முதலில் பிரபாகரனுக்குத் தெரியாது. பின்னர்தான் தெரியும். தனபாலசிங்கம் இப்போது போலீஸ் உளவாளியாக மாறி இருந்தார்.
பிரபாகரனும், அவருடைய சிறு குழுவும் டெலோவுடன் இணைந்த போது, அவர்களின் முதல் இலக்கு தனபாலசிங்கம்தான். பிரபாகரனும், குட்டிமணியும் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியான கல்வியான்காடு என்ற இடத்தில் சாலையோரம் நின்றபடி தனபாலசிங்கம் பேசிக்கொண்டிருந்தார். இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த தனபாலசிங்கம், துப்பாக்கியை எடுப்பதற்குள், பிரபாகரன் அவரைச் சுட்டுக் கொன்றார்.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் வற்புறுத்தியதன் பேரில், பிரபாகரன் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரானார். உமா மகேஸ்வரன், புதிய இயக்கத்தை தொடங்கினார். அதற்கு தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (`பிளாட்’) என்று பெயர். 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி உமா மகேஸ்வரனின் வலதுகரமாகவும், “புதிய பாதை” என்ற இதழை நடத்தி வந்தவருமான சுந்தரம் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
“புதிய பாதை” பத்திரிகையில் விடுதலைப்புலிகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சுந்தரம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அச்சகத்துக்குள் இருந்த சுந்தரத்தை ஜன்னல் வழியாக சீலன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ஊர்மிளா விவகாரம் பூதாகரமாக கிளம்பியபோது, விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைக்கடத்தி ஒளித்து வைத்தது, இந்த சுந்தரம்தான். இந்தக் கொலைக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பேற்றனர். பிரபாகரனைப் பழிவாங்க உமா மகேஸ்வரன் தமிழ்நாட்டுக்குத் தப்ப முடிவு செய்தார். கண்ணன், காக்கா, ஆண்டன், தாசன் ஆகியோருடன் பிப்ரவரி 25-ந்தேதி படகில் ஏறி தமிழகம் வந்தார். படகில் திரும்பிய ஆண்டனை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர் அளித்த தகவலின் பேரில் வவுனியாவில் இருந்த “பிளாட்” முகாமை ராணுவம் தாக்கியது. அதில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை வந்து சேர்ந்த உமா மகேஸ்வரன், சென்னையில் தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனார் இல்லத்தில் தங்கி இருந்தார். சுந்தரத்தின் கொலைக்கு, பிரபாகரனை பழிவாங்கக் காத்திருந்தார். உமா மகேஸ்வரனை தீர்த்துக்கட்ட பிரபாகரனும் சமயம் பார்த்திருந்தார்.
ஆசியாவின் மிகச்சிறந்த யாழ்ப்பாணம் நூலகம்
தீ வைத்து எரிப்பு
**************
ஆசியாவின் மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்களர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் 97 ஆயிரம் அபூர்வ நூல்கள் எரிந்து சாம்பலாயின. தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய வெறியாட்டங்களில் ஒன்று, யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்பவம் ஆகும். போராளிகளிடம் தோல்வி அடையும்போதெல்லாம், தங்கள் கோபத்தை அப்பாவித் தமிழர்கள் மீது காட்டுவது சிங்களர்களின் வழக்கம். அரசியல் தலைவர்களின் தூண்டுதலுடன் சிங்கள வெறியர்கள் இதுமாதிரியான தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு போலீசாரும் துணையிருப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழர்களின் நூலகம், ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்கியது. அங்கு அபூர்வமான தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வந்தன. தவிர, உலகம் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட சிறந்த நூல்களும் இடம் பெற்று இருந்தன. இங்கு இருந்த நூல்களின் எண்ணிக்கை சுமார் 97 ஆயிரம்.
1981 ஜுன் 1-ந்தேதி, இந்த நூலகத்துக்கு சிங்களர்கள் தீ வைத்தார்கள். தீ வேகமாகப் பரவியது. தீயை அணைக்க, தீயணைக்கும் படையினரோ, மற்ற அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூலகத்தில் இருந்த 97 ஆயிரம் நூல்களும் எரிந்து சாம்பலாயின. நூலகக் கட்டிடத்துக்கும் பெரிய சேதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது, ஜெயவர்த்தனா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சிறில் மேத்ï, காமினி திசநாயகா ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய ஆதரவுடன்தான், யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின்போது, லண்டன் மீது சர்வாதிகாரி ஹிட்லர் விமானத் தாக்குதல் நடத்தினார். ஜெர்மனி விமானங்கள் அணி அணியாகப் பறந்து சென்று, குண்டுகளை வீசின. அப்போது, விமானப்படை தளபதிக்கு ஹிட்லர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். “லண்டனின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தாக்குங்கள். ஆனால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் மீது மட்டும் குண்டு வீசவேண்டாம்!” என்றார். கல்வி நிறுவனங்களை அழிக்கக்கூடாது என்று ஹிட்லர் நினைத்தார். ஹிட்லருக்கு இருந்த மனிதாபிமானம் கூட, சிங்களருக்கு இல்லை.
நூல் நிலையத்தை எரித்ததுடன் சிங்கள வெறியர்கள் நிற்கவில்லை. யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர், அவ்வையார், ஆறுமுகநாவலர் ஆகியோரின் சிலைகளையும் உடைத்து நொறுக்கினார்கள்.
யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்களர்கள் எரித்த சம்பவத்துக்கு, பழிக்குப்பழி வாங்க போராளிகள் துடித்துக்கொண்டிருந்தனர். அதனால் பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரத்னாவை போராளிகள் சுட்டுக்கொன்றனர். போராளிகளையும், பொதுமக்களையும் கைது செய்து, போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து வந்தவர் இவர்.
இந்த சமயத்தில், இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக லலித் அதுலத் முதலி பொறுப்பேற்றார். இவர் இஸ்ரேல் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, பின்னர் அரசியலுக்கு வந்தவர். இவர் இலங்கை அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு, இஸ்ரேல் நாட்டுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, சிங்கள ராணுவத்தை பலப்படுத்தி வந்தார். ஜெயவர்த்தனாவின் பதவிக்காலம் முடிந்தபின்னர், தான் அதிபர் ஆகிவிடவேண்டும் என்பது அதுலத் முதலியின் திட்டம்.
அதிபர் பதவி மீது கண் வைத்திருந்த மற்றொரு அமைச்சர் காமினி திசநாயகா. இவர் நிலத்துறை அமைச்சராக இருந்தார். தமிழர் பகுதிகளில் சிங்களர்களை பெரும் அளவில் குடியமர்த்தி வந்தார். இதன் காரணமாக, ஜெயவர்த்தனாவிடம் இவருக்கு நல்ல பெயர் இருந்தது. ‘எப்படியாவது விடுதலைப் போராளிகளை ஒடுக்கி விட்டால், அதிபர் பதவியை கைப்பற்றி விடலாம்’ என்று அவர் கணக்குப்போட்டார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில், தேசிய பாதுகாப்பு மாநாட்டை அதுலத் முதலி கூட்டினார். வழக்கமாக இந்த மாநாடு, இலங்கைத் தலைநகரான கொழும்பு நகரில் நடப்பதுதான் வழக்கம். இம்முறை யாழ்ப்பாணத்தில் கூட்டுவதற்கு காரணம் இருந்தது.
அமிர்தலிங்கம், “தமிழர் விடுதலைக் கூட்டணி”யின் தலைவராக இருந்தார். பாராளுமன்றத்தில், கணிசமான எண்ணிக்கையில் தமிழ் “எம்.பி.”க்கள் இடம் பெற்றிருந்தனர். அமிர்தலிங்கத்தை இம்மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம், தமிழர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக வெளி உலகுக்கு காட்டிக் கொள்ளலாம், அதன் மூலம் விடுதலைப் போராளிகளை மட்டம் தட்டலாம் என்பது ஜெயவர்த்தனாவின் திட்டமாகும்.
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, அமிர்தலிங்கத்தை ஜெயவர்த்தனா அழைத்தார். அவரை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்த அமிர்தலிங்கம், மாநாட்டில் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாண அரசு செயலகத்தில், மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரமே இருந்தது. அப்போது திடீரென்று ஒரு குண்டு வெடித்தது. குண்டை வைத்தவர்கள் விடுதலைப் போராளிகள்தான். “பயங்கரவாத அரசுக்கு எதிரான ஆயுதப்புரட்சியை, அரசியல் சந்தர்ப்பவாதிகளின் உதவியுடன் ஒடுக்கிவிட முடியாது. இதை எடுத்துக்காட்டத்தான் இந்த குண்டு வெடிப்பு” என்று விடுதலைப் போராளிகள் அறிக்கை விடுத்தனர். அமிர்தலிங்கம் “அரசியல் சந்தர்ப்பவாதி” என்று, விடுதலைப் போராளிகளால் குற்றஞ்சாட்டப்பட்டார்.
தமிழீழத்துக்கு ஆதரவாக
உலகத் தமிழர் மாநாடு
அமேரிக்காவில் நடந்தது – 4-2-1982
**********************************
இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு (“தமிழீழம்”) வேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரில் “உலகத் தமிழர் மாநாடு” நடந்தது. தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, சர்வதேச ரீதியில் நடைபெற்ற முதல் மாநாடு இதுவேயாகும். இந்த மாநாடு நியூயார்க் நகரில் 1982 பிப்ரவரி 4-ந்தேதி (இலங்கை சுதந்திர தினம்) அன்று நடைபெற்றது. மாநாட்டை, இலங்கைத் தமிழரும் அமெரிக்காவின் பிரபல டாக்டருமான வின்ஸ்டன் பஞ்சாட்சரம் முன்னின்று நடத்தினார். (இவர், பிற்காலத்தில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க ‘பன்னாட்டுத் தமிழ்நடுவம்’ என்ற அமைப்பை நிறுவினார்.) மாநாட்டுக்கு “பெருங்கவிக்கோ” வா.மு.சேதுராமன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில், தமிழ் ஈழக்கொடி ஏற்றப்பட்டது. எல்லோரும் “வாழ்க ஈழத்தமிழகம் – வாழ்க, வாழ்க, வாழ்கவே!” என்று தொடங்கும் தமிழ் ஈழ நாட்டுப் பண்ணை சேர்ந்து பாடினார்கள். டாக்டர் பஞ்சாட்சரம் வரவேற்றுப் பேசுகையில் கூறியதாவது:- “இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி இருக்கிறார்கள். நாமில்லா நாடில்லை; ஆனால் நமக்கென்று ஒரு நாடில்லை. இலங்கையை ஆண்டவர்கள் தமிழர்கள். நமக்கு சொந்தமான மண், சிங்களர்களிடம் பறிபோய்விட்டது. சிங்கள அரசுடன் பல ஒப்பந்தங்கள் செய்தும் பலன் இல்லை. தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. இனப்படுகொலையை சிங்களர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், தமிழ் ஈழம் அமைப்பதுதான் ஒரே வழி. வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில், தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில், இதுபற்றி உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். தமிழ் ஈழம் அமைக்க, உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.” இவ்வாறு டாக்டர் பஞ்சாட்சரம் கூறினார்.
‘இலங்கைத் தமிழர்களின் தந்தை’, ‘இலங்கையின் காந்தி’ என்று போற்றப்படுகிற மறைந்த செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன் இந்த மாநாட்டில் பேசியதாவது:- “தமிழ் மக்களை சிங்களர்கள் படுகொலை செய்கிறார்கள். சிங்களர்களின் அட்டூழியங்களால், மலையகத் தமிழர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய குடியுரிமையை இலங்கை அரசு பறித்தது, உலகத்திலேயே மிக அநீதியான செயலாகும். இனக்கலவரம் காரணமாக, மலையகத்தில் இருந்து வெளியேறி தமிழ் ஈழத்துக்கு வர முயற்சிக்கும் தமிழர்களை ராணுவம் தடுக்கிறது; சித்ரவதை செய்கிறது. பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை, தமிழ் ஈழப்பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுப்போம். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தனை தமிழர்கள் இங்கு கூடியிருப்பது ஒரு சாதனை; தமிழ் ஈழம் பற்றி சிந்திக்கத் தொடங்கியது ஒரு சாதனை. நாம் ஒன்றுபட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், தமிழ் ஈழத்தை அடையமுடியும்.” இவ்வாறு சந்திரஹாசன் கூறினார்.
இலங்கை தமிழர் விடுதலை முன்னணி தலைவரான அமிர்தலிங்கம் கூறியதாவது:- “இலங்கை அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததின் நோக்கம், இலங்கையில் ரத்தக்களறி நிற்கவேண்டும்; பயந்து வாழும் தமிழ் மக்களுக்கு நிம்மதியைத் தரவேண்டும்; மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை அதிகமாக்கி, தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்யவேண்டும் என்பதுதான். தமிழ் ஈழக்கோரிக்கையை முன்வைத்து, தேர்தலில் வெற்றி பெற்றோம். தமிழ் ஈழக்கோரிக்கைக்கு ஆதரவாகத்தான், எங்களை பாராளுமன்றத்துக்கு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். எனவே, தமிழ் ஈழ கோரிக்கையை நாங்கள் கைவிடவோ, ஒத்திவைக்கவோ மாட்டோம். நாங்கள் அவ்வாறு செய்யவேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. ஆனால், நாங்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘தமிழ் ஈழம்தான் எங்கள் லட்சியம்’ என்று உறுதியாகக் கூறிவிட்டோம். உலகின் பல பாகங்களில் இருந்து இங்கு வந்து கூடியிருக்கிறோம். இலங்கைத் தமிழர்கள் மீது வெளிநாடுகள் வெறும் அனுதாபம் தெரிவித்தால் போதாது. தமிழ் ஈழத்தை ஒன்றிரண்டு நாடுகளாவது அங்கீகரிக்க வேண்டும். அதற்கு நாம் பாடுபடவேண்டும்.” இவ்வாறு அமிர்தலிங்கம் கூறினார்.
தமிழகத்தில் இருந்து சென்று மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய “காமராஜ் காங்கிரஸ்” தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:- “தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்வதில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. சர்வதேச நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் இலங்கை அரசு பணியும். அதற்கு நாம் பாடுபடவேண்டும். தமிழ்நாட்டில் 41/2 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இது தவிர 32 நாடுகளில் தமிழர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். மொத்த தமிழர்கள் எண்ணிக்கை 9 கோடி. இந்த 9 கோடி தமிழர்களின் ஆதரவையும் ஒன்று திரட்டவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள், கட்சி வேறுபாடுகளை மறந்து, சுதந்திர தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களை ஆதரிக்குமாறு, மத்திய அரசை தமிழர்கள் ஒன்றுபட்டு நிர்பந்திக்க வேண்டும்.” இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.
உலக தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் இரா.சனார்த்தனம் பேசுகையில், “இலங்கைத் தமிழர்கள் தங்கள் வரலாற்றை அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, யாழ்ப்பாணம் நூல் நிலையத்தையே சிங்களர்கள் எரித்துவிட்டார்கள். கடவுளிடம் சென்று தமிழர்கள் முறையிடுகிறார்கள் என்பதற்காக, கோவில்களை எல்லாம் கொளுத்துகிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு, தமிழ் ஈழம்தான்” என்றார். இலங்கைத் தமிழர் தலைவர்களில் ஒருவரான ஈழவேந்தன் பேசுகையில், “வெள்ளையர், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் சுமார் 200 ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். அப்போதுகூட அவர்கள் தமிழ் சமுதாயத்தை அழிக்க முற்படவில்லை. ஆனால், 33 ஆண்டுகால சிங்களர் ஆட்சியில் தமிழ் சமுதாயம் அழிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
“தமிழ் ஈழ தோழமைக் கழக”த்தின் தலைவரான அரு.கோபாலன் (அருகோ) பேசுகையில், “இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இலங்கைப் பிரச்சினை தீர ஒரே வழி தமிழீழம்தான்” என்று குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு பேசுகையில், “உலகின் எந்த மூலையில் எந்தஒரு சமுதாயமும் ஒடுக்கப்பட்டாலும், அதை இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை. இலங்கைத் தமிழர்கள் நசுக்கப்படுவதை இந்தியா பார்த்துக் கொண்டிராது” என்றார். இலங்கைத் தமிழர் தலைவர்களில் ஒருவரான மு.ந.சிவசிதம்பரம் பேசுகையில், “இலங்கைத் தமிழர்கள் வாழவேண்டுமானால், தமிழ் ஈழத்தைத் தவிர மாற்று வழியில்லை” என்றார்.
ஐ.நா.சபைக்குள் திடீர் என்று சென்று, தமிழ் ஈழம் பற்றி 2 நிமிடம் பேசி அனைவரைண்ம் பரபரப்பில் ஆழ்த்திய கிருஷ்ணா வைகுண்டவாசன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். “தமிழ் ஈழம் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் போதாது. நம் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும். அடுத்த நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கவேண்டும்” என்று அவர் கூறினார்.
மாநாட்டுத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேசுகையில், “தமிழ் இளைஞர்கள், தமிழ் ஈழத்துக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்.
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு, மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “இலங்கையின் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்களுக்கு, “தமிழ் ஈழம்” என்ற தனி சுதந்திர நாட்டை அமைக்க வேண்டும். இதற்கு உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை பாண்டி பஜாரில் மோதல்:
துப்பாக்கியால் சுட்டார், பிரபாகரன்!
உமா மகேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் தப்பினார்

**********************************************************
சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனை, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால், உமா மகேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். தங்கதுரை, குட்டிமணி, பிரபாகரன் ஆகியோரை சிங்கள போலீஸ் தேடியது. இதனால், அங்கு இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர்கள், 1973-ம் ஆண்டு ஒரு படகில் ஏறி தமிழ்நாட்டுக்கு (வேதாரண்யம்) வந்தனர். அவர்களுடன் பெரியஜோதியும் வந்தார்.
தங்கதுரையும், குட்டிமணியும் சேலத்துக்குச் சென்றனர். பிரபாகரன், அவர்களோடு செல்லாமல், பெரியஜோதியுடன் சென்னைக்கு வந்தார். அங்கே உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இரா.சனார்த்தனம் உதவியோடு, கோடம்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை மாதம் 175 ரூபாய்க்கு வாடகைக்குப்பிடித்தனர். “சென்னையில் இருந்தபடி, தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்கலாம். இலங்கைத் தமிழர்களின் நிலைமையை எடுத்துச் சொல்லலாம்; முடிந்தால் அவர்கள் உதவியைப் பெறலாம்” என்பது பிரபாகரனின் எண்ணம். அப்போதெல்லாம் இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கவில்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, பிரபாகரனுக்கு பிடிக்கவில்லை. இதனால் 1974-ம் ஆண்டு மத்தியில் பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1977-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து, ஆண்டன் பாலசிங்கத்தின் நட்பு, விடுதலைப்புலிகளுக்குக் கிடைத்தது. 1938-ம் ஆண்டு பிறந்த ஆண்டன் பாலசிங்கம், தனது வாழ்க்கையை ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கினார். “வீரகேசரி” தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றிய அவர், இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அருகில் அமைந்து இருந்த பிரிட்டிஷ் கவுன்சிலில் பணியாற்றிய ஒரு யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது மரணம் அடைந்தார். இதன்பிறகு ஆண்டன் பாலசிங்கம், ஆஸ்திரேலிய நர்சான அடேல் என்பவரை 1978-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
1979-ம் ஆண்டு ஊர்மிளா விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கவும், உமா மகேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் மீண்டும் நட்பைப் புதுப்பிக்கவும் ஆண்டன் பாலசிங்கம் சென்னை வந்தார். அப்போது அவரை பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் அடிக்கடி சந்தித்து உரையாடினார்கள். ஊர்மிளா விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க முடியாமல் லண்டன் சென்ற பாலசிங்கம் 1981-ம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பொறுப்பை மாத்தையாவிடம் ஒப்படைத்து விட்டு, 1981-ம் ஆண்டு ஜுன் மாதம் 6-ந்தேதி இரவு நம்பிக்கைக்குரிய 10 பேரோடு பிரபாகரன் மீண்டும் வேதாரண்யம் வந்தார். பிறகு அவர்கள் சென்னை வந்து வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர்.
அங்கே போராளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமைப்பார்கள். பிரபாகரன், பாலசிங்கம், பண்டிதர், சங்கர், ரகு, பேபி சுப்பிரமணியம், நேசன், ராகவன், அடேல் பாலசிங்கம் ஆகியோர் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு வேலையைச் செய்து சமையலை முடிப்பார்கள்.
பிரபாகரன் அசைவ உணவு தயாரிப்பதில் – குறிப்பாக மீன் குழம்பு வைப்பதில் திறமைசாலி. போராளி வாழ்க்கையைத் தேர்ந்து எடுத்த பிறகு, தாங்களே சமையல் செய்வது அவசியம் என்பதை போராளிகளுக்குப் பிரபாகரன் உணர்த்தி இருந்தார். சென்னையில் போராளிகள் பயிற்சி பெற்றனர். அடேல் பாலசிங்கத்துக்குக்கூட அவர்கள் ஆயுதப் பயிற்சி அளித்தனர்!
இந்த நிலையில் 1982-ம் ஆண்டு மே 19-ந்தேதி இரவு 9.45 மணிக்கு பிரபாகரனும், ராகவனும் ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றனர். அந்த ஓட்டலில் உமா மகேஸ்வரன், கண்ணனுடன் உணவு அருந்திவிட்டு வெளியே வந்து மோட்டார் சைக்கிளை `ஸ்டார்ட்’ செய்தார். அவர்களை பிரபாகரன் பார்த்துவிட்டார். அதே சமயம் கண்ணனும், பிரபாகரனைப் பார்த்துவிட்டு, “அதோ பிரபாகரன்!” என்று உமா மகேஸ்வரனிடம் கூறினார்.
பிரபாகரன், உமா மகேஸ்வரன் இருவரும் ஒரே நேரத்தில் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்தனர். பிரபாகரன் முந்திக்கொண்டார். அவர் துப்பாக்கியிலிருந்து குண்டுகள் சீறிப்பாய்ந்தன. கண்ணனின் காலில் 6 குண்டுகள் பாய்ந்தன. அவர் கீழே சாய்ந்தார். அதற்குள் உமா மகேஸ்வரன் சுதாரித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.
துப்பாக்கிச்சூடு நடந்ததால், பாண்டி பஜாரில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் சேர்ந்த காரணத்தால், பிரபாகரனும், ராகவனும் போலீஸ் நிலையம் வழியாக ஓடினார்கள். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்தார். பிரபாகரனின் வாழ்க்கையில் அவர் கைதானது இதுவே முதல் முறையாகும். காயம் அடைந்த கண்ணன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மே 25-ந்தேதி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உமா மகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார். “கரிகாலன்” என்ற பெயரில் பிரபாகரன் மீதும் “முகுந்தன்” என்ற பெயரில் உமா மகேஸ்வரன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காயம் அடைந்த கண்ணன், எல்லா உண்மைகளையும் கூறிய பிறகே, தாங்கள் கைது செய்து இருப்பது, விடுதலைப்புலிகள் என்பது போலீசுக்கு தெரியவந்தது.
கைதான இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. அவர்களை நாடு கடத்தாமல் தடுப்பதற்காக செல்வநாயகத்தின் மகனும், வக்கீலுமான சந்திரஹாசன் சென்னை வந்தார். அவர் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது கலைஞர் ஆட்சியில் இல்லை. ஆயினும் இந்திரா காந்தியுடன் கூட்டணி தொடர்ந்த காரணத்தினால், டெல்லி மேலிடத்தில் இதுபற்றி பேசுவதாக உறுதி அளித்தார்.
அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு போராளிகள் கைது பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டது. `பையன்கள் விஷயத்தில் கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள்’ என்று போலீஸ் தலைமையிடம் எம்.ஜி.ஆர். கூறினார். சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பழ.நெடுமாறன் ஏற்பாடு செய்தார். அப்போது அவர் தமிழ்நாடு “காமராஜ் காங்கிரஸ்” தலைவர். “கைதான போராளிகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது” என்று இந்தக் கூட்டம் வலியுறுத்தியது.
இருவரையும் விடுவித்து விடலாம் என்ற முடிவுக்கு பிரதமர் இந்திரா காந்தியும் வந்திருந்தார். இதற்கு முதல் காரணம், ஜெயவர்த்தனா அரசு அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்தது. இரண்டாவது காரணம் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீது ஜெயவர்த்தனா அரசு சிறப்பு கவனம் செலுத்தியது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உமா மகேஸ்வரன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் தங்கி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
உமா மகேஸ்வரன் சென்னையில் தமிழ் அறிஞர் பெருஞ்சித்தரனார் வீட்டில் தங்கி இருந்தார். பிரபாகரன் மதுரையில் பழ.நெடுமாறன் வீட்டில் தங்கி இருந்தார். ஏறத்தாழ 7 மாதம் பிரபாகரன் அங்கே இருந்தார். அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறி இருந்தார். பிறகு ஒரு நாள் திடீரென்று காணாமல் போனார். அவர் இலங்கைக்குத்தான் போய் இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்ததால் அவரை யாரும் தேடவில்லை.
விடுதலைப் புலிகள் தாக்குதல்
13 இராணுவத்தினர் பலி
*****************
1982-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி இரண்டு மாடிக் கட்டிடத்தில் அமைந்து இருந்த சாகவச்சேரி போலீஸ் நிலையத்தை சீலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் தாக்கினார்கள். மினி பஸ்சில் வந்த சங்கர், புலேந்திரன், ரகு, மாத்தையா, சந்தோஷம் உள்ளிட்ட 8 விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிட நேரம் போலீசாருடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஏராளமான ஆயுதங்களை போலீசாரிடம் இருந்து விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். ஆனால் போலீஸ்காரர் சுட்டதில், புலேந்திரன், ரகு ஆகியோர் காயம் அடைந்தனர். போலீஸ்காரரின் ஒரு துப்பாக்கிக்குண்டு சீலன் முழங்காலில் பாய்ந்தது. படுகாயம் அடைந்த சீலனை, அவரது கூட்டாளிகள் தூக்கிச்சென்று மினி பஸ்சில் ஏற்றினார்கள்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியானந்தனும், அவருடைய மனைவி நிர்மலாவும் சீலனுக்கு அடைக்கலம் அளித்தனர். ஏறத்தாழ 2 வாரம் அங்கு தங்கி சீலன் ஓய்வெடுத்தார். பிறகு மருத்துவ சிகிச்சைக்காக படகு மூலம் தமிழ்நாட்டுக்குத் தப்பிச்சென்றார். அவருக்கு உதவியாக சங்கர் படகில் சென்றார்.
சீலன், பாதுகாப்பாக தமிழகத்துக்கு போய்ச் சேர்ந்த செய்தியைத் தெரிவிக்கவும், நித்தியானந்தம் தம்பதிகளுக்கு நன்றி தெரிவிக்கவும் யாழ்ப்பாணம் வந்த சங்கர், நிர்மலா வீட்டிற்குச் சென்றார். அப்போது அந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்தது. சங்கர் தப்பி ஓட முயன்றபோது, ராணுவத்தினர் சுட்ட குண்டு, சங்கர் வயிற்றில் பாய்ந்தது. காயம் பட்ட வயிற்றைக் கையில் பிடித்துக்கொண்டே சங்கர் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடினார். மறைவிடத்துக்குச் சென்று தன் வசம் இருந்த துப்பாக்கியை புலிகளிடம் ஒப்படைத்தார். சங்கரை அங்கிருந்த தோழர்கள் படகில் ஏற்றிக்கொண்டு தமிழகத்தின் கோடியக்கரையில் இறங்கினார்கள். அங்கிருந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சங்கரைச் சேர்த்தனர்.
தகவல் அறிந்த பிரபாகரன் ஒரு பயிற்சி முகாமில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வந்தார். சங்கர் பிரபாகரனிடம் எதோ பேச முயன்றார். ஆனால் சிறிது நேரத்தில் 22 வயதான சங்கரின் உயிர், பிரிந்தது. ‘என் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இறப்பதை, முதல் முறையாக என் கண்ணால் காண்கிறேன்’ என்று கூறி, பிரபாகரன் கண்கலங்கினார்.
வெறும் 30 பேரைக் கொண்ட ஒரு இயக்கத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் ராணுவத்துக்கு கொண்டாட்டமாகப் போய்விடும் என்பதால், சங்கரின் மரணம் குறித்து அப்போது யாருக்கும் தெரிவிக்கவில்லை. 7 ஆண்டுகளுக்குப்பிறகு சத்தியநாதன் என்கிற சங்கரின் மறைவு தினம் (நவம்பர் 27) “மாவீரர் தினமாக” கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜுலை 6-ந்தேதி அதிகாலை 2.30 மணி. காங்கேசன்துறை சிமெண்டு தொழிற்சாலை முன்பு 2 ராணுவ ‘ஜீப்’கள் வந்து நின்றன. அந்த ‘ஜீப்’பின் முன் இருக்கையில் இருந்து இறங்கிய அதிகாரியைப் பார்த்து ஆலைக்குக் காவல் நின்ற வீரர்கள் `சல்ïட்’ அடித்தனர். “சிமெண்டு ஆலையை விடுதலைப்புலிகள் தாக்குவதாகத் தகவல் வந்துள்ளது. அதனால் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக நாங்கள் வந்து இருக்கிறோம். யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டாம். இங்கேயே நிறுத்தி வையுங்கள்” என்று சிங்களத்தில் ஆணை பிறப்பித்த அந்த அதிகாரியின் ‘ஜீப்’ நேராக உள்ளே சென்றது. அந்த அதிகாரி வேறு யாருமல்ல. சீலன் என்கிற சார்லஸ் அந்தோணி. பிரபாகரனின் வலது கரம்! இலங்கை ராணுவ அதிகாரிகள் போல மாறுவேடத்தில் அவரும், மற்ற விடுதலைப்புலிகளும் இருந்தனர்.
வெடிமருந்தை மின்சாரம் பாய்ச்சி அதன் மூலம் வெடிக்கச் செய்யும் ‘எக்ஸ்ப்ளோடர்’ வைக்கப்பட்டிருந்த அறைக்குத்தான் சீலன் சென்றார். ஆலையின் தொழிலாளர்களிடமே ‘ஸ்டோர்’ அறையின் சாவியை வாங்கி, அங்கிருந்த 5 ‘எக்ஸ்ப்ளோடர்’களை எடுத்து ஜீப்பில் போட்டுக்கொண்டு புறப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் புலிகள் இருக்கும் இடம் பற்றி ராணுவ அதிகாரி மேஜர் சரத் முனசிங்கேவுக்கு, உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு ராணுவ வாகனத்தில் போகக்கூடாது என்று கருதிய முனசிங்கே, சீலன் கடைப்பிடித்த அதே தந்திரத்தைக் கையாண்டார். ஜுலை 15-ந்தேதி, பயணிகள் மினி பஸ்சை சிவிலியன் உடையில் வந்த ராணுவத்தினர் மடக்கினார்கள். அதில் இருந்த டிரைவரையும், கண்டக்டரையும் ராணுவ முகாமில் அடைத்து வைத்தனர்.
அதன்பிறகு மேஜர் முனசிங்கே டிரைவர் இருக்கையில் அமர மினிபஸ் புறப்பட்டது. பல இடங்களில் சுற்றித்திரிந்த போதிலும் மாலை 6 மணி வரை விடுதலைப்புலிகளைக் கண்டறிய முடியவில்லை. அப்போது 2 சைக்கிள்களில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் சீலன் என்பது யாருக்கும் தெரியாது. அவரது கையில் இயந்திர துப்பாக்கி இருந்ததைக் கண்ட ராணுவ அதிகாரி, சைக்கிளுக்கு அருகே ‘பிரேக்’ போட்டு மினி பஸ்சை நிறுத்தினார். வந்திருப்பது ராணுவம் என்பதைக் கண்டுகொண்ட அந்த 3 போராளிகளும், சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.
அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 100 மீட்டர் தூரம் ஓடுவதற்குள் ஆனந்தன் கீழே விழுந்தார். இன்னொரு 100 மீட்டர் ஓடுவதற்குள் சீலன் கீழே விழுந்தார். சாவகச்சேரி போலீஸ் நிலையத் தாக்குதலின்போது அவருக்கு குண்டு பாய்ந்து ஜவ்வு கிழிந்து இருந்தது. தமிழ்நாட்டுக்குப்போய், சிகிச்சை பெற்றும் முழுமையாக குணம் அடையவில்லை. இப்போது வேகமாக ஓடியதில் ஜவ்வு மீண்டும் கிழிந்தது. அவரால் ஓடமுடியவில்லை. அவரை அருணா இழுத்துக்கொண்டு ஓட முயன்றார். முடியவில்லை. அவர்களை ராணுவத்தினர் நெருங்கிக் கொண்டிருந்தனர். தன்னால் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த சீலன், “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீ ஓடிவிடு” என்று கத்தினார். அருணா தயங்கியபோது, “நான் சொல்வதைச்செய். என்னைச்சுடு” என்று அதட்டலுடன் உத்தரவிட்டார்.
அருணாவுக்கு வேறு வழி தெரியவில்லை. எதிரிகள் நெருங்கி வந்துவிட்டனர். சிந்திப்பதற்கு நேரம் இல்லை. அருணா சுட்ட குண்டு, சீலனின் தலையைத் துளைத்து மூளையை சிதறடித்தது. சீலன் உடலை அங்கேயே போட்டுவிட்டு, இயந்திரத் துப்பாக்கியுடன் அருணா ஓடினார். அவரை நோக்கி ராணுவத்தினர் சுட்டனர். அவர் கையில் குண்டு பாய்ந்தது. அந்தக் காயத்துடன் தப்பிய அருணா, ஒரு காரை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டு, தப்பி விட்டார். சீலன் என்கிற சார்லஸ் அந்தோணியின் தியாகம் விடுதலைப் புலிகளின் நெஞ்சை நெகிழச் செய்தது.
(அவரது நினைவாக தன் மகனுக்கு சார்லஸ் அந்தோணி என்ற பெயரை பிரபாகரன் சூட்டினார்)
குறுகிய காலத்தில் சங்கர், ஆனந்தன், சீலன் ஆகிய 3 பேரை விடுதலைப்புலிகள் அமைப்பு இழக்க நேரிட்டதால், இதற்கு பதிலடி கொடுக்க பிரபாகரன் தீர்மானித்தார். 1983-ம் ஆண்டு ஜுலை 23-ந்தேதி, ராணுவ ரோந்து வண்டியை கண்ணி வெடி வைத்து தகர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு இலங்கையில் உள்ள திருநெல்வேலி சந்திப்பில் கண்ணி வெடியைப் புதைத்தனர். பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு விக்டர், புலேந்திரன், சந்தோஷம், அப்பையா உள்பட 14 பேர்களும் அங்கு காத்திருந்தனர்.
அந்த சமயத்தில் ஒரு ராணுவ ‘ஜீப்’ முன்னால் வர, அதைத்தொடர்ந்து ராணுவ லாரி வந்தது. செல்லக்கிளி ‘சுவிட்சை’ அழுத்தியதும், இரு கண்ணி வெடிகளும் ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் போலீஸ் ‘ஜீப்’ வெடித்து சிதறியது. பின்னால் வந்த ராணுவ லாரி, நூலிழையில் தப்பிவிட்டது.
சாலையில் பதுங்கி இருந்த விடுதலைப்புலிகள், ராணுவத்தினரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இந்த சம்பவத்தில் 13 சிங்கள ராணுவத்தினர் பலியானார்கள். வெற்றிக்களிப்புடன் வந்த விடுதலைப்புலிகள், செல்லக்கிளியைக் காணாமல் திடுக்கிட்டனர். அவர் துப்பாக்கி சண்டை போடவில்லை. அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து எக்ஸ்ப்ளோடரை இயக்கினார். அங்கே போய்ப் பார்த்தபோது, மார்பில் குண்டு பாய்ந்து செல்லக்கிளி இறந்து கிடந்தார். அதைக்கண்டு, பிரபாகரன் கண்ணீர் விட்டார்.
வெலிக்கடை சிறையில் படுகொலை
************************************
கொழும்பு நகரம் அருகே, வெலிக்கடை சிறையில் இருந்த 37 தமிழர்களை சிங்களர்கள் திட்டமிட்டு கொடூரமான முறையில் கொலை செய்தனர். அப்போது அவர்கள் குட்டிமணியின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்தனர். இலங்கையில் பல ஆண்டுகளாகவே விட்டு விட்டு கலவரங்கள் நடந்து வந்தன. எனினும், இலங்கையில் உள்நாட்டுப்போர் வெடிப்பதற்குக் காரணமான கலவரம், 1983 ஜுலை 25-ந்தேதி வெலிக்கடை சிறையில் நடைபெற்றது.
கலவரத்தின்போது கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகள், வெலிக்கடை சிறைச்சாலையில் எப்போது, ஏன் அடைக்கப்பட்டார்கள் என்ற விவரம் வருமாறு:-
ஈழத்தமிழர் ஆயுதப்புரட்சியின் முன்னோடி ‘டெலோ’ இயக்கத்தைச் சேர்ந்த தங்கதுரை. அவரும், குட்டிமணி தேவன் என்கிற செல்லதுரை, சிவசுப்பிரமணியம் ஆகியோரும் படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல பருத்தித்துறைக்கு அருகில் உள்ள மணல்காடு என்ற இடத்தில் காத்திருந்தனர். அவர்கள் 3 பேரையும், சிறீசபாரத்தினம் கடற்கரையில் இறக்கி விட்டு, 11 மணிக்கு படகு வரும் என்று சொல்லிச் சென்றார். ஆனால் படகு வரவில்லை. சிங்கள போலீசார் வந்தனர். யாரோ துப்பு கொடுத்துத்தான் இவர்கள் அங்கு வந்துள்ளனர்.
தமிழ்ப் போராளிகளை சிங்கள போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அவர்கள் உத்தரவின் பேரில் கையை உயரே தூக்கிய குட்டிமணி, தன்னைத்தானே நெற்றியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் துப்பாக்கியால் சுட்டு, அதைத் தடுத்துவிட்டனர். போலீஸ் சுட்டபோது பாய்ந்த குண்டு, குட்டிமணியின் காதுமடலை துளைத்துச் சென்றது. கைதான மூவரையும் கையில் விலங்கு மாட்டி, காலில் சங்கிலி பூட்டி விமானம் மூலம் கொழும்பு நகருக்குக் கொண்டு சென்றனர்.
தங்கதுரை, குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, “டெலோ” இயக்கத்தின் இன்னொரு முக்கிய உறுப்பினரான ஜெகனும் போலீஸ் வலையில் சிக்கினார். இவர்கள் அனைவரும் கொழும்பு அருகில் உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் தாக்குதலில் பலியான 13 ராணுவ வீரர்களின் உடல்களை சவப்பெட்டிகளில் எடுத்து வருவதற்குப் பதிலாக, ரத்தம் உறைந்து போன பாலிதீன் பைகளில் கட்டி ராணுவத்தினர் எடுத்து வந்தனர். இந்தப் பிணங்களை, திரளான எண்ணிக்கையில் கூடியிருந்த சிங்களர்களின் பார்வைக்கு வைத்து, அவர்களின் வெறியை தூண்டி விட்டனர். அரசாங்கத்தின் ஆசியைப் பெற்றுக்கொண்டு தமிழர்கள் மீது சிங்களர்கள் கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். ஜுலை 24-ந்தேதி தொடங்கி மொத்தம் 7 நாட்கள்; தமிழன் என்று ஒரு இனமே இருக்கக்கூடாது என்ற உக்கிரம் அவர்கள் உள்ளத்தில் இருந்தது.
கொழும்பு நகரில் வன்முறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, தமிழர்களை அடையாளம் கண்டறிந்து, தேடிப்பிடித்து வெட்டினார்கள். தமிழர்களின் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு உள்ளே தீப்பந்தங்களை எறிந்தார்கள். தமிழர்களின் கடைகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, பொருட்களை கொள்ளையடித்து விட்டு, கடைகளைக் கொளுத்தினார்கள். கண்ணில் கண்ட தமிழர்களை எல்லாம் கொன்று குவித்தனர்.
இந்தக் கலவரம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பதுளை, வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற பகுதிகளிலும் பரவியது. இந்தக் கலவரத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பு நகரில் மட்டும் 2 ஆயிரம் தமிழர்கள் பலியானார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து, அகதிகள் ஆனார்கள்.
கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைப்பயன்படுத்தி, வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ்க் கைதிகளை கொல்வதற்கு ரகசியத் திட்டம் வகுக்கப்பட்டது. சிறைச்சாலைக்குள் தமிழ்க் கைதிகளுக்கும், சிங்களக் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்க் கைதிகள் இறந்து போனார்கள் என்று நாடகமாட திட்டமிட்டனர்.
ஜுலை 25-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு உயர் அதிகாரிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி மதிய உணவுக்கு தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். அவர்கள் சென்றவுடன், குடிபோதையில் இருந்த சிங்கள கைதிகள் கடப்பாரை, கத்தி, அரிவாள், கோடாரி எனப் பயங்கர ஆயுதங்களால், சிறையில் இருந்த தமிழ்க் கைதிகளை வெறி கொண்டு தாக்கினார்கள். அதே சமயம், சிறைக்கு வெளியே இருந்தும் சிங்கள குண்டர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர்.
தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க் கைதிகளை அடித்தே கொன்றனர். குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நேரத்தில், அவர்கள் இருவரும் தங்கள் கண்களை, பார்வையற்ற தமிழர்களுக்கு வழங்கும்படியும், அதன் மூலம் தமிழ் ஈழத்தைப் பார்க்க முடியும் என்றும் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தனர். குட்டிமணியின் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது. சிங்கள வெறியர்கள் அவரை வெளியே இழுத்து வந்தனர். அவரது நாக்கை ஒருவன் அறுத்தான். பீறிட்டு வந்த குட்டிமணியின் ரத்தத்தை இன்னொருவன் குடித்துவிட்டு, “புலியின் ரத்தத்தை ருசித்து விட்டேன்” என்று உற்சாகத்தில் உரக்கக் கத்தினான். ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு கும்மாளம் அடித்தனர். அப்போது குட்டிமணியின் உடலில் அசைவு இருந்தது.
குட்டிமணியின் கண்கள் இரண்டையும், கூரிய கத்தியைக்கொண்டு தோண்டி எடுத்தனர். “இந்தக் கண்கள் தானே, தமிழ் ஈழத்தைக் காண விரும்பிய கண்கள்” என்று கூறியபடி, அந்தக் கண்களை கீழே எறிந்து, பூட்ஸ் காலால் மிதித்தனர். ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டன. அப்போது சிறையின் ஒரு மூலையில் 14 வயது சிறுவன் மயில்வாகனன் பதுங்கி நின்றான். இதைக் கவனித்த சிறை அதிகாரி முடியைப் பிடித்து இழுத்து வந்து அவனை அடித்துக்கொன்றார்.
புத்தர் சிலை அருகே 37 உடல்களையும் கொண்டு போய் குவித்து வைத்தனர். அப்போது ஒருவன், “புத்தரே பாரும்! உம்மையும், உம் மதத்தையும் ஏற்காதவர்களுக்கு நேர்ந்த கதியைப் பாரும்” என்று கத்தினான்.
கொடூரமாகக் கொல்லப்பட்ட 37 கைதிகளின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், மிகப் பெரிய குழி தோண்டி அதற்குள் வீசினார்கள். பின்னர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதுவும் சிங்களக் கைதிகளை கொண்டு செய்யப்பட்டது.
வெலிக்கடை சிறையில்
மீண்டும் சிங்களர்கள் வெறியாட்டம்
17 தமிழர்களை அடித்துக் கொன்றனர் – 27.7.1983

*********************************************
இலங்கையில், வெலிக்கடை சிறையில் மீண்டும் கலவரம் மூண்டது. இரண்டு பாதிரியார்கள் உள்பட 17 தமிழர்களை, சிங்கள வெறியர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொன்றனர். கொழும்பு நகரம் அருகே உள்ளது வெலிக்கடை சிறைச்சாலை. அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஈழப்போராளிகளான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்பட 37 தமிழ்க் கைதிகளை, 25-ந்தேதியன்று சிங்களக் கைதிகளும், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்கள வெறியர்களும் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
நெஞ்சை பிளக்கும் இந்த சம்பவம் நினைவை விட்டு அகலும் முன்பே, இன்னொரு பயங்கர சம்பவம் வெலிக்கடை சிறையில் நடந்தது. அங்கு மேலும் 17 தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். சிங்கள வெறியர்களின் இரக்கமற்ற அரக்கத்தனத்துக்கு அவர்கள் பலியாகி விட்டார்கள்.
கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பாதிரியார்கள். ஒருவர் டாக்டர். ஒருவர் கல்லூரி பேராசிரியர். விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவர்களை இலங்கை போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருந்தார்கள். காந்தீய இயக்கத்தைச் சேர்ந்தவரான சோமசுந்தரம் ராஜசுந்தரமும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் டெலிபோன் தொடர்பு அடியோடு துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே இலங்கையில் உள்ளவர்கள் லண்டன், சிங்கப்பூர் முதலிய இடங்களில் உள்ள நண்பர்களுக்கு டெலிபோனில் தகவல் தெரிவித்தார்கள். அங்கிருந்து சென்னைக்கு வந்த தகவல்கள் வருமாறு:- “இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் அட்டூழியம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் வீடுகளுக்கு வெளியே வரச்செய்து, வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றார்கள். கண்டியில், தமிழ் தோட்டத் தொழிலாளர்களையும், மற்ற தமிழர்களையும் ராணுவத்தினர் வேட்டையாடி சுட்டுக் கொன்றார்கள். கண்டியில் மட்டும் இறந்த தமிழர்களின் எண்ணிக்கை 500-க்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இன்னும் ஒரு வாரம் இதே நிலை நீடித்தால் இலங்கையில் தமிழர்களே இல்லாதபடி பூண்டோடு ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கையில் உள்ள தமிழர்கள் நெஞ்சம் பதைபதைக்க டெலிபோனில் லண்டனில் உள்ள தமிழர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு லண்டன் தகவல்கள் கூறின.
இலங்கையில் நடக்கும் கொடுமைகளை பிரசுரிக்காதபடி இலங்கை பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது. வெளிநாடுகளுக்கும் செய்தியோ, படங்களோ கொடுக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் வீடுகள் பற்றி எரிவதை யாரும் படம் எடுக்க முடியவில்லை. படம் எடுப்பவர்களை ராணுவத்தினரும், சிங்களர்களும் தடுத்து விடுகிறார்கள். படம் எடுப்பவர்களுடைய ‘கேமிரா’க்களையும் உடைத்து நொறுக்கினார்கள்.
இலங்கையில் சப்ளை செய்யப்படும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக இலங்கை முழுவதும் பொதுமக்களிடம் பீதி பரவியது. இது தவறான தகவல் என்றும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது என்றும் அதில் விஷம் எதுவும் கலக்கப்படவில்லை என்றும் இலங்கை அரசு அறிவித்தது.
ஊரடங்கு சட்டம் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. அரிசி, பலசரக்கு, காய்கறி முதலிய அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். தீயில் எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் ஏராளமான கடைகள் நாசமாகிவிட்டதால், எஞ்சியுள்ள கடைகள் முன் நீண்ட “கிï” வரிசைகள் நின்றன. மீண்டும் மாலை 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பிற்பகல் 2 மணிக்கே கொண்டுவரப்பட்டது.
கண்டியில் இருந்து கொழும்புவை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில் வண்டி ஒன்றை ஆயுதம் தாங்கிய சிங்கள வெறியர்கள் தாக்கினார்கள். ரெயிலில் இருந்த தமிழர்களை கொன்றார்கள். திரிகோணமலையில் சிங்கள மாலுமிகள் துப்பாக்கிகளுடன் தமிழர் வீடுகளை தாக்கினார்கள். வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.
இலங்கை தமிழர் தலைவரான அமிர்தலிங்கம், தலைமன்னாரில் இருந்து கப்பலில் ராமேசுவரம் வந்து, அங்கிருந்து டெல்லிக்குப்போய், பிரதமர் இந்திராவை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், கப்பல் போக்குவரத்து ரத்தாகிவிட்டதால், இது முடியவில்லை. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு டெலிபோன் செய்து, நான் கொழும்பு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல வேண்டும். பிறகு டெல்லி சென்று இந்திரா காந்தியை சந்திக்க வேண்டும். நான் கொழும்பு செல்ல பாதுகாப்பு கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். ஆனால், பாதுகாப்பு தர ஜெயவர்த்தனா மறுத்துவிட்டார்.