WWE வீரரான அண்டர்டேக்கர், தான் ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
90களின் சிறார்களுடன் தொடர்புபடுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்று WWE—யும் அதன் போட்டியாளர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த வரிசையில் அண்டர்டேக்கர் பலரது விருப்பத்திற்குரியவராக இருந்த காலம் உண்டு.
இவரின் இயற்பெயர் மார் காலவே, இவர் கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன் இந்த துறைக்கு வந்தார். தொழில்முறை சண்டைப் போட்டியில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு நபராக இருந்தார் அண்டர்டேக்கர்.
`தி லாஸ்ட் ரைட்` என்ற ஆவணப்படத்தில் பேசிய அண்டர்டேக்கர், மீண்டும் வளையத்திற்குள் வந்து சண்டையிட விரும்பவில்லை என்று கடந்த ஜுன் மாதம் அறிவித்தார். அது அவர் ஓய்வுப் பெறுவதை குறிப்பது போல உள்ளது என அவரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
மேலும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் பங்குபெறுவேன் ஆனால் அதையும் காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அந்த சமயத்தில் WWE தரப்பிலிருந்தும், அண்டர்டேக்கர் தரப்பிலிருந்தும் ஓய்வு பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில்தான் அண்டர்டேக்கர் ஓய்வு பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
தனது ஓய்வு குறித்து பேசிய அண்டர்டேக்கர், “தற்போது எனது காலம் வந்துவிட்டது. அண்டர்டேக்கர் அமைதியாக ஓய்வெடுக்கும் சூழல் வந்துவிட்டது,” என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வந்ததும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
`30 ஆண்டுங்களாக WWEக்காக அர்ப்பணித்து உழைத்த அண்டேக்கருக்கு நன்றி` என WWE வீரர் ஜான் சீனா தெரிவித்துள்ளார்.
WWE-ன் `ரெசல் மேனியா` நிகழ்ச்சியில் அதிக வெற்றி பெற்றவராகவும் இவரின் ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
யார் இந்த அண்டர்டேக்கர்?

பட மூலாதாரம்,GETTY IMAGES
55 வயதாகும், அண்டர்டேக்கருக்கு `டெட்மேன்` என்ற பட்டப்பெயரும் உண்டு. ரசிகர்கள் அவரை இந்த பெயரிலும் அதிகம் அழைப்பதுண்டு.
`இவரை புதைத்தாலும் இவருக்கு உயிர் வரும்` என்பது போல, போட்டிகளில் திடீர், திடீரென உயிர்த்தெழுந்த மனிதர் போல ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சிகளால் இவருக்கு `டெட்மேன்` என்ற பெயர் வழங்கப்பட்டது.
பல முறை உலக பளுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கார் மார்க் காலவே எனும் அண்டர்டேக்கர். 1987ஆம் ஆண்டு `வேல்ட் க்ளாஸ் சாம்பியன்ஷிப்` மூலம் தனது தொழில்முறையை வாழ்க்கையை தொடங்கிய அண்டர்டேக்கர் 1990ஆம் ஆண்டு WWE-ல் இணைந்தார்.
WWE-ல் புகழ்பெற்றிருந்தாலும், இவர் ஜான் சீனாவை போன்றோ, ட்வேயன் ’தி ராக்’ ஜான்சனை போன்றோ திரைப்படங்களில் நடிக்கவில்லை.
பிபிசியிடம் கடந்த மே மாதம் பேசியிருந்த அண்டர்டேக்கர், தன்னால் படங்களில் நடிக்க இயலும் ஆனால் அதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
“தொழில்முறை சண்டையும், WWE—யும் தான் எனது லட்சியம். இதில்தான் நான் முழுவதுமாக ஈடுபட்டுள்ளேன், இதில்தான் என் இதயம் உள்ளது,” என தெரிவித்திருந்தார்.
`குடும்பம் ரசிகர்கள்கள் இரண்டையும் மதிக்கிறேன்`
சமீபத்தில் பிபிசியிடம் பேசிய அண்டர்டேக்கர், “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த துறையில் நுழைந்தேன். அப்போது இணைய வசதியோ அல்லது அலைபேசிகளோ இல்லை, எனது நிகழ்ச்சிகள் மூலமாக மட்டும்தான் மக்கள் என்னை பார்த்தனர்,” என்றார்.
ஆனால் தற்போது இணையதள வசதி நிறைந்த இந்த காலத்தில் அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை படம் எடுக்கின்றனர்.
“எனது தனிமையை மதிக்கும் இடத்திற்கு நான் எனது குடும்பத்துடன் செல்ல விரும்புவேன். எனது ரசிகர்களை நோக்கி எனக்கு பொறுப்பு உள்ளது. அதேபோல அப்பா மற்றும் கணவராகவும் எனக்கு சில பொறுப்புகள் உண்டு,” என்று அண்டர்டேக்கர் கூறியிருந்தார்