சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை மிகவும் வேகமாகக் கடந்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
கான்பெர்ராவில் நடக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தாம் விளையாடிய 300-ஆவது இன்னிங்சில் 12,000 ரன்களை கடந்திருந்தார்.
ஆனால் 242-ஆவது இன்னிங்சிலேயே விராட் கோலி 12,000 ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டி வரை 11,977 ரன்கள் எடுத்திருந்தார் கோலி.
இன்றைய ஆட்டத்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. இது இவருக்கு 251-ஆவது சர்வதே ஒருநாள் போட்டியாகும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 மற்றும் 11,000 ரன்களை மிகவும் வேகமாக, அதாவது மிகவும் குறைவான இன்னிங்ஸ்களில் கடந்த கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை விராட்கோலி ஏற்கனவே பெற்றுள்ளார்.
இந்திய வீரர்களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார் விராட் கோலி.
சச்சின் டெண்டுல்கர் தாம் விளையாடிய 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை 251 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 12,040 ரன்கள் எடுத்துள்ளார்.
205-ஆவது இன்னிங்சில் 10,000 ரன்களையும் 222-ஆவது இரண்டாவது இன்னிங்சில் 11,000 ரன்களையும் கடந்து இருந்தார் கோலி.
2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களையும் 59 அரை சதங்களையும் கடந்துள்ளார்.