You are currently viewing ரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே!

ரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே!

சென்னை: ரஜினிகாந்த் அரசியல் வருகை திமுக ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற கிண்டல்களை, சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. திமுக தலைமை கலக்கம் அடைந்து உள்ளதாகவும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

ஆனால் திமுகவை விடவும் அதிமுக கட்சிக்கு தான் அதிக இழப்பு ஏற்பட போகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ரஜினியால் அதிமுகவுக்கு தான் அடி அதிகமாக இருக்கும் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதில், முதலாவது காரணம் ரொம்பவே முக்கியமானது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது அரசியலுக்கு வரும் துணிச்சலைப் பெறாத ரஜினிகாந்த்! சினிமா கவர்ச்சி அதிமுக என்றைக்குமே சினிமா ஸ்டார் ஒருவரின் ஆளுமையின் கீழ் இருந்த கட்சி. அந்த கட்சியினர், எப்போதுமே சினிமா பிரபலத்துக்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

உதாரணத்திற்கு திமுகவிலிருந்து அதிமுக பிரிந்து வந்த பிறகு, எம்ஜிஆருக்கு தனி வாக்கு வங்கி உருவானது. தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சியில் இருக்க முடிந்தது. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற பல பிரச்சினைகளை முன்வைத்து, காங்கிரசை வீழ்த்தியது திமுக. அதற்கு முக்கிய பங்காற்றி களத்தில் இறங்கி வேலை பார்த்தவர் கருணாநிதி. ஆனால் சினிமா பிரபலத்தால் திடீர் உச்சத்துக்கு வந்த எம்ஜிஆர், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு வரவிடாமல் அடுத்தடுத்த தேர்தல்களில் முட்டுக்கட்டை போட்டார் என்றால் அதிமுக வாக்கு வங்கி எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியும். எம்ஜிஆர் திரை பிம்பம் தமிழ்நாட்டுக்கான பெரிய திட்டங்களையோ, வளர்ச்சி பணிகளையோ எம்ஜிஆர் ஆட்சி செய்யவில்லை என்ற போதிலும் கூட, எம்ஜிஆருக்கு அதிமுகவினர் அபரிமிதமான ஆதரவு அளிக்க அவரது சினிமா பிம்பம் ஒரு முக்கியமான காரணம். சினிமாவில் வாரி வழங்கக்கூடிய வள்ளல்.. தவறுகளை தட்டிக் கேட்க கூடிய ஆபத்துதவி போன்ற வேடங்களில் மட்டுமே நடித்து வந்தவர் எம்ஜிஆர். இதற்காகவே ஓட்டுப் போட்டனர் அப்போதைய அதிமுகவினர். ஜெயலலிதா தலைமை இதன் பிறகு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக கைமாறியபோது, ஜெயலலிதா என்ற பிம்பத்தை பார்த்து ஓட்டுப்போட்டு பழகினர். 1991 முதல் 96 ஆம் ஆண்டு இடைப்பட்ட, தனது முதலாவது ஆட்சி காலத்தில் ஜெயலலிதா பெரிய மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வரவில்லை. சொத்துக் குவிப்பு உட்பட, அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகள், அராஜகங்கள் கட்டவிழ்ந்தன என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும், 2001 ஆம் ஆண்டு மறுபடியும் அவருக்கே ஓட்டு போட்டனர் அதிமுகவினர். எடப்பாடி-ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தால் போதும், அவரை பார்த்தால் போதும், ஓட்டு போடுவோம் என்ற மனநிலையில்தான் அதிமுகவினர் இருந்தனர். இப்படி தொடர்ந்து சினிமா பிம்பத்தின் பின்னால் வாக்கு வங்கியை கட்டி எழுப்பியுள்ளது அதிமுக. இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் சினிமா பிரபலம் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர்தான் அந்த தலைமை வகிக்கிறார்கள். எனவே, இயல்பாகவே சினிமா பிம்பத்திற்கு பழக்கப்பட்டுப்போன அதிமுகவின் வாக்காளர்கள், எம்ஜிஆர் பாணியில்.. திரையில் தொடர்ந்து தன்னை ஒரு உச்ச நட்சத்திரமாக காட்டிக் கொண்டு வரும் ரஜினி மீது இயல்பான ஆர்வம் எழுவது இயற்கை. எனவே அதிமுகவின்,

கணிசமான ஓட்டுகள் ரஜினிகாந்த் கட்சிக்கு மடைமாற்றம் செய்யப்படும். திமுகவுக்கு இழப்பு இல்லையே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 1996ஆம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தின்போது, ரஜினிகாந்த் கொடுத்த ஒரு பேட்டி புகழ் பெற்றது. “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று கூறி திமுக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் அவரையும் அடுத்தடுத்த தேர்தல்களில் அரவணைத்துக் கொண்டார் ஜெயலலிதா. எனவே 1996 ஆம் ஆண்டு தேர்தலை தவிர பிற தேர்தலில் திமுகவுக்கு ரஜினி ரசிகர்கள் கணிசமாக ஓட்டு போடவில்லை. அடுத்தடுத்த காலங்களில் இந்த இடைவெளி அதிகரித்து கொண்டே சென்றது. அதாவது ரஜினி ரசிகர்கள் மிக சொற்பமான அளவுக்கு மட்டும்தான் திமுகவுக்கு ஓட்டு போட்டனர். பெரும்பாலும் அதிமுக அல்லது பாஜகவின் அனுதாபிகளாக உள்ளனர். எனவே ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு பெரிய அளவுக்கான இழப்பு ஏற்படாது. ஓரளவுக்கு இழப்பு ஏற்படலாம்.

 

Leave a Reply